ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயில் மலைப் பகுதியில் பூமி தோன்றிய போதே உருவான பாறைகளை அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் ஆய்வு செய்தனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் புவிஅறிவியல் துறையில் எம்.எஸ்.சி., ஜியாலஜி படிக்கும் மாணவ, மாணவிகள் 77 பேர் களஆய்வு மற்றும் வரைபடம் தயாரித்தல் பயிற்சிக்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மலைப் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை வேலப்பர் மலை பகுதியில் உள்ள "அனார்த்தோசைட் வகை பாறைகளை கண்டனர். இவ்வகை பாறைகள் நிலவில் உள்ள பாறை வகைகளைச் சேர்ந்தது. பூமி தோன்றிய போதே இருந்த இப்பாறைகள் தமிழ்நாட்டில் கடவூர், நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி மற்றும் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் பகுதியில் உள்ளது. இதில் பிளாட்டினம், கோரண்டம், கார்டேட் போன்றவை இருக்க சாத்திய கூறுகள் உள்ளன. கேரளா, ஒடிசா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். பேராசிரியர்கள் குமார், குமாரவேல் மற்றும் கணேஷ் கூறுகையில், ""அனார்த்தோசைட் பாறைகள் பூமி உருவான போது இருந்த பாறைகள், இவை நிலவில் காணப்படுகிறது, என்றனர்.