பதிவு செய்த நாள்
20
டிச
2013
11:12
பழநி: ஐயப்பசீசனுக்காக, பழநி வந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், பக்தர்களிடம் வலுக்கட்டயமாக யாசகம்(பிச்சை) கேட்டு தொந்தரவு செய்கின்றனர். தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள பழநிகோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால், கேரளா மற்றும் தமிழக ஐயப்ப பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தானைச் சேர்ந்த, நூற்றுக்கு மேற்பட்டவர்கள், பழநி-பை பாஸ் ரோடு ஓரங்களில் கூடாரங்கள் அமைத்து, கார்த்திகை, தைப்பூச சீசனுக்காக, கைப்பொம்மைகள், பூச்செடிகளை தயார் செய்து பக்தர்களிடம் விற்கின்றனர். இவர்களின் 5 வயது முதல் 12 வயது வரையுள்ள சிறுவர்கள், குழுவாகவும், தனித்தனியாகவும், பழநி பஸ் ஸ்டாண்ட், அடிவாரம், கிரிவீதி, பாதவிநாயகர் கோயில் போன்ற பகுதியில், நின்றுகொண்டு, பக்தர்களின், காலில் விழுந்தும், கையைபிடித்து இழுத்தும், யாசகம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். பக்தர்கள் தரமறுத்தால், புரியாத பாசையில் வசைபாடுகின்றனர். சிறுவர்களுடன் இணைந்து, ராஜஸ்தானிய பெண்கள் சிலரும் யாசகம் கேட்டு பக்தர்களை தொந்தரவு செய்கின்றனர். ஏற்கனவே உள்ள இடைத்தரகர்கள், கையேந்தி வியாபாரிகள் தொந்தரவுடன், இவர்களின் தொந்தரவால் பழநி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிடவேண்டும்.