பதிவு செய்த நாள்
20
டிச
2013
11:12
மாமல்லபுரம்: மல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில், நீர் நிரம்பிய பாரம்பரிய கிணற்றை காணும் சுற்றுலா பயணிகள் அதிசயிக்கின்றனர்.மாமல்லபுரம் கடற்கரை கோவில், பல நுாற்றாண்டுகளாக மண்ணில் புதைந்திருந்தது. இந்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்து, கோவிலை கண்டுபிடித்தது. எனினும், கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு, கோவிலை ஒட்டிய, வடபகுதி தரையை பராமரிக்க முயன்றபோது, தரைமட்டத்திற்கு கீழ் பகுதியை அகழாய்வு செய்தபோது, 6 அடி ஆழத்தில் தரைமட்டக் கிணறும், அதன் மேல் பகுதியில், படிக்கட்டுகளுடன் கூடிய தொட்டி அமைப்பும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கிணற்றில் வழக்கமாக நீர்மட்டம் குறைந்தே காணப்படும். தற்போது மழை காரணமாக, நீர் நிரம்பி, மேல் பகுதி தொட்டி வரை வந்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு அதிசயித்து வருகின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், தற்போதைய நில மட்டத்திலிருந்து கிணற்றின் மேல் அமைப்பாக உள்ள தொட்டி, 6 அடிக்குக் கீழ் உள்ளது. கிணறு, அதிலிருந்து 6 அடி ஆழம் என்கின்றனர். கிணற்றை காணும்போது, பழங்கால தரைமட்டத்தை அறிய முடிகிறது. இதுகுறி்த்து, சிலருக்கே தெரிகிறது. அனைவரும் அறியும் வகையில், கிணறு குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் என்றனர்.மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஜீலானிபாஷா கூறும்போது, தகவல் பலகை வைப்பது குறித்து, உயரதிகாரிகளுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.