பதிவு செய்த நாள்
21
டிச
2013
10:12
தினமலர் மூலமாக தீர்வு பிறக்கும்; மூதாட்டி நம்பிக்கை
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர் பெருமாள் சுவாமி கோயிலுக்கு புறநகர் பஸ்கள் வந்து செல்லாததால் தரிசனத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் குழந்தைகளுடன் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளதால் பக்தர்கள் பெரும் வேதனையடைகின்றனர்.திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் பெருமாள் சுவாமி கோயில்,மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது.வெளி மாநிலங்களிலிருந்தும்,பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.திருப்புல்லாணி வழியாக புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டும் திருப்புல்லாணி கோயிலுக்கு பஸ் செல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ராமநாதபுரத்தில் மற்றொரு பஸ்சில் மாறி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதனால் நேர விரையமும்,மன உலைச்சலும்,கூடுதல் செலவும் ஏற்படுகிறது. சில கண்டக்டர்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு, கிழக்கு கடற்கரை சாலை திருப்புல்லணி முக்கு ரோட்டில் இறக்கி விட்டு செல்கின்றனர்.குழந்தைகளுடன் பக்தர்கள் அவதியடைகின்றனர்.காரைக்குடியில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த சிவசுந்தரி அம்மாள்(62) நம்மை மொபைலில் தொடர்பு கொண்டு, திருப்புல்லாணி கோயிலுக்கு வந்து செல்லுமாறு அழைத்தார்.அவரை சந்தித்த போது கூறியதாவது; திருப்புல்லாணி வழியாக ஏராளமான புறநகர் அரசு பஸ்கள் செல்கிறது.இருப்பினும் திருப்புல்லாணி செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்து வருகின்றனர்.இது குறித்து புகார் செய்தால் "பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே சென்றால் டவுன் பஸ் கிடைக்கும் ஏறிச் செல்லுங்கள் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.மக்களுக்காக பஸ்கள் இயக்கப்படவில்லை.என்னை போன்ற முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கோயில் திருப்பணிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவிடும் தமிழக ஜெயலலிதா பக்தர்கள் சிரமமின்றி சுவாமியை தரிசிக்கும் வகையில் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும்.தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டால் தான் தீர்வு பிறக்கும்.அதிகாரிகள் கண்ணை திறப்பார்கள். இது சம்பந்தமாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு புகார் மனு அனுப்புவேன்,என்றார்.(இதே புகாரை அங்கிருந்த பக்தர்கள் பலர் நம்மிடம் தெரிவித்தனர்) திருப்புல்லாணி ஊராட்சி தலைவர் முனியசாமி கூறியதாவது: ராமநாதபுரத்தில் கலெக்டர் விஜயகுமார் பணியாற்றிய போது மதுரை,திருச்சி போன்ற நகரங்களில் இருந்து ஏர்வாடி,கீழக்கரை செல்லும் விரைவு பஸ்களும்,தூத்துக்குடி, திருச்செந்தூர், சாயல்குடியிலிருந்து ராமநாதபுரம் செல்லும் அரசு புறநகர் பஸ்களும் திருப்புல்லாணி கோயிலுக்கு வந்து செல்ல வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. பஸ் கண்ணாடியில் திருப்புல்லாணி கோயில் பெயரை ஒட்டி வைத்து இருந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக டிரைவர்கள் தங்களின் சுயநலத்திற்காக வழித்தடத்தை மாற்றிக் கொண்டனர். இதற்கு கார்ப்பரேஷன் அதிகாரிகளும் ஒத்துழைக்கின்றனர்.இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை, என்றார்.