பதிவு செய்த நாள்
26
டிச
2013
11:12
திருச்சி: திருச்சியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நேற்று கொண்டாடினர். திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. திருச்சி மாநகரில் ஜோசப் கல்லூரி வளாகத்தில் உள்ள லூர்து அன்னை தேவாலயம், மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா பேராலயம். புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம், எடத்தெரு பழைய கோவில், உறையூர் சி.எஸ்.ஐ., ஆலயம், பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம், ஸ்ரீரங்கம் அமலா ஆஸ்ரமம். அந்தோணியார் பேராலயம், பாலக்கரை சகாயமாத ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, இயேசு கிறிஸ்து பிறப்பு தினமான கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடினர். ஆங்காங்கே சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, தேவாலயங்களில் வண்ண விளக்குககளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆலயங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்தவர்கள், குழந்தைகளுக்கு பரிசு, வாழ்த்து அட்டைகளை வழங்கினர். கிறிஸ்துமஸ்க்காக சிறப்பு கேக் வகைகள் தயார் செய்யப்பட்டு பேக்கரிகளில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை வாங்க நேற்றிரவு வரை மக்கள் பலரும் ஆர்வத்துடன் குவிந்தனர். கேக் வகைகள், பலகாரங்களை உறவினர், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, அசைவ ஹோட்டல்கள், இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தேவாலயங்களில் நேற்று அதிகாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.