பதிவு செய்த நாள்
31
டிச
2013
11:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வாயில் கருப்புத் துணிக்கட்டியபடி பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஊர் மற்றும் காலனி தரப்பினரிடையே பிரச்னை உள்ளது. இது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க பலமுறை கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இது தொடர்பாக நேற்று, மீண்டும் ஆர்.டி.ஓ., குணசேகர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. திருக்கோவிலூர் டி.எஸ்.பி., ராஜேந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் தரப்பினர் கூட்ட அரங்கில் நேற்று முற்பகல் 11:00 மணி முதல் காத்திருந்தனர். அப்போது, வி.சி., கட்சி மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் வந்த 20க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்புத் துணி கட்டியபடி, ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தனர். இதனால் அமைதிக்குழு கூட்டத்தில் சுமுக தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து மாரியம்மன் கோவில் தேரை போலீசார் உதவியுடன், இந்து அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். பதட்டமான சூழல் தணியும்வரை இந்த தேர், அவர்கள் வசம் இருக்கும் என ஆர்.டி.ஓ., குணசேகர் உத்தரவிட்டார். இச்சம்பவத்தால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.