பதிவு செய்த நாள்
11
ஜன
2014
10:01
மதுரை: மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட, மாரியம்மன் தெப்பக்குளத்தை பாதுகாக்க, ரூ.25 லட்சம் செலவில் இரும்பு கதவு அமைக்கும் பணி நடந்து வருகிறது. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் இந்த தெப்பக்குளத்தில், ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத்திருவிழா நடக்கும். இவ்விழா அன்று காலை மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் சுவாமியும் இருமுறை தெப்பத்தில் வலம் வருவர். மையமண்டபத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, இரவு 8 மணிக்கு மேல், ஒரு சுற்று வலம் வந்து, கோயிலுக்கு திரும்புவர். இதற்காக, தெப்பக்குளத்தில் செயற்கை முறையில் தண்ணீர் நிரப்பப்படும். கடந்த ஆண்டு அதற்கும் வழி இல்லாததால், 50 ஆண்டுகளுக்கு பின், நிலைத்தெப்பத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். இந்தாண்டிற்குஉரிய விழா, ஜன.,16ல் நடக்கிறது. தற்போதும் நிலைத்தெப்பத்தில்தான் எழுந்தருளுகின்றனர். இதற்கிடையே, வறண்ட தெப்பம், விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானமாகவும், இரவு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்கும் வகையில், குளத்தை சுற்றியுள்ள 12 வாசற்படிகளில் இரும்புக்கதவு அமைக்கும் பணி நடந்து வருகிறது.கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், விழா காலங்களில் அதை அகற்றும் வகையில் கதவு அமைக்கப்பட்டு வருகிறது. குளத்தை சுற்றியுள்ள கற்சிலைகள் சீரமைக்கப்பட உள்ளன. குளத்தின் சுற்றுச்சுவர் குறைவாக இருப்பதால், அதிலிருந்து அந்நியர்கள் குதித்து சென்று, வருவது சிரமம். தவிர, ஆடு, மாடுகள் மேய்வது தடுக்கப்படும். இதுபோன்ற காரணங்களால் குளத்தின் புனிதம் காக்கப்படும். தெப்பத்திருவிழாவிற்கு பின், பணி முழுமை அடையும், என்றார்.