பதிவு செய்த நாள்
11
ஜன
2014
11:01
உடுமலை:ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் சார்பில் இந்தாண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற, ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கோவிலில், பொங்கலையொட்டி, திருவிழா வரும் 15 ம் தேதி துவங்குகிறது. திருவிழாவிற்கு, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். திருவிழாவின் போது, பக்தர்கள் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்காக, கோவில் அருகில், கடைகள், விளையாட்டு சாதனங்கள் அமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடப்படுகிறது.இந்தாண்டு, 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏல விதிமுறைகளில், மக்களின் பாதுகாப்பு கருதி, "ஜெயண்ட் வீல் அமைக்க கூடாது என்ற உத்தரவும் இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டது.இந்நிலையில், திருவிழாவையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை வருவாய்த்துறை மற்றும் போலீசார் செயல்படுத்த உள்ளனர்.வருவாய்த்துறை கோட்டாட்சியர் குணசேகரன் தலைமையில், திருவிழா ஏற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், பக்தர்களுக்கு தேவையான இடங்களில், குடிநீர் வசதி ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நாள்முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. போட்டிகளை பார்வையிடுபவர்களுக்கு, தற்காலிக நிழற்குடையும் அமைக்கப்படும். கோவில் வளாகத்தில், அரசுத்துறைகள் சார்பில், அரங்குகள் அமைக்கப்பட்டு, துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.கோவில் திருவிழாவிற்கு வரும் வாகனங்களுக்கு இடை யூறு ஏற்படாமல் இருக்க, குடிமங்கலம் போலீசார் பல்வேறு உத்தரவுகளை செயல்படுத்த துவங்கியுள்ளனர். முதன்முதலாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பெதப்பம்பட்டி நால்ரோட்டில், "பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.நடைபாதை கடைக்கு தடைகோவில் அருகிலுள்ள நடைபாதையில், கடைகள் அமைக்கவும், பெதப்பம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில், கூம்பு "ஸ்பீக்கர் அமைப்பது குறித்து, மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் மற்றும் முக்கியமான இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த இந்து அறநிலையத்துறைக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.