பதிவு செய்த நாள்
11
ஜன
2014
11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்ல, இரவு 10 மணிக்கு மேல் பஸ் வசதியின்றி, பக்தர்கள் ஆட்டோவுக்கு கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரசு டவுன் பஸ், ஆட்டோவில் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகின்றனர். அதிகாலை 4 மணி முதல் இரவு 10 வரை, அரசு டவுன் பஸ் சர்வீஸ் முடிகிறது. இதன்பின்னர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் கோயில், வீடுகளுக்கு செல்ல பஸ் இல்லை. பாதுகாப்பு இல்லாத பஸ் ஸ்டாண்டில், பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருக்க முடியாத நிலையில், ஆட்டோவுக்கு கூடுதலாக 80 முதல் 100 ரூபாய் வரை கொடுக்கும் அவலம் தொடர்கிறது. பகலில் 50 முதல் 70 ரூபாய் வாங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு, இரவு சவாரி என்றால் " ஜாக்பாட் தான். பக்தர்கள் துயர் துடைக்க, 2003ம் ஆண்டில் அப்போதைய கலெக்டர் விஜயகுமார், இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வெளியூர் பஸ்களும், கோயில் வரை செல்ல வேண்டும் என உத்தரவிட்டார். இம்முறை, சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கடந்த 3 ஆண்டுகளாக இரவு பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பஸ் ஸ்டாண்டில் உலா வரும் சமூக விரோதிகளால், பக்தர்கள் பாதிக்கப்படுன்றனர். இரவில் வரும் பஸ்கள்: ராமேஸ்வரத்திற்கு இரவு 10 மணிக்கு மேல், கும்பகோணம் டிப்போ பஸ் ஒன்றும், காரைக்குடி டிப்போ பஸ்கள் 18, மதுரை டெப்போ பஸ்கள் 2, புதுக்கோட்டை டெப்போ பஸ்கள் 5, நெல்லை டிப்போ பஸ்கள் 2 என, 28 அரசு பஸ்கள் அதிகாலை 4 மணி வரை வருகின்றன. இவற்றில் வரும் பயணிகள், அரசு உத்தரவை கூறி டிரைவர், கண்டக்டரிடம் கேட்டால், "முடிந்தால் பஸ் ஸ்டாண்டில் இறங்கு, இல்லையெனில் டெப்போவில் இறக்கி விடுவேன் என, மிரட்டுகின்றனர். மாநில நுகர்வோர் இயக்க முன்னாள் பொருளாளர் ஜெயகாந்தன் கூறியதாவது: நள்ளிரவில் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற வெளியூர் பஸ்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக செல்வதில்லை. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலன் கருதி, கடந்தாண்டில் டெப்போ மேலாளரிடம், பல முறை புகார் கொடுத்தும் பலனில்லை. பஸ் சர்வீஸை நிறுத்திய டெப்போ மேலாளர்கள் மீது, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். இதன் பின்னர், மீண்டும் இரவு பஸ் சர்வீஸ் துவங்கினால், பஸ் ஸ்டாண்டில் கண்காணிப்பு குழு நியமிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். ராமேஸ்வரம் அரசு பஸ் டெப்போ மேலாளர் தேவேந்திரன் கூறியதாவது: நள்ளிரவில் கோயில் வரை செல்ல அனைத்து பஸ் டிரைவர், கண்டக்டருக்கு உத்தரவிட்டு உள்ளேன். கோயிலுக்கு செல்லாத பஸ்கள் குறித்து, புகார் கொடுத்தால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.