பதிவு செய்த நாள்
15
ஜன
2014
02:01
*சூரியன் கிழக்கு திசையில் உதிப்பவர் என்பதால், முகம் மேற்கு நோக்கி இருக்கும் என்பது
இயல்பான நிலையே. இதைக் குறிக்கும் வகையில் சூரியனார்கோவில் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
*பொதுவாக கருவறைக்கு நேரே அந்தந்த தெய்வத்திற்குரிய வாகனங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். சிவனுக்கு நந்தியும், அம்மனுக்கு சிம்மமும், விநாயகருக்கு மூஞ்சூறும், முருகனுக்கு மயிலும் இருக்கும். சூரியனார் கோயிலில் அவருக்குரிய வாகனமான ஏழுகுதிரைகள் எதிரே இருந்தாலும், அவற்றுக்கு முன்னதாக குருபகவான் வீற்றிருக்கிறார். அவரது பார்வை படுவதால், சூரியனின் உக்கிரம் குறைந்து விடும். குரு பார்வையால் கோடிநன்மை பெறும் சூரியன், அதை அப்படியே பக்தர்களிடம் வாரி வழங்குகிறார்.
*நவக்கிரகங்களில் ஒன்றான சூரியனே மூலஸ்தானத்தில் அமைந்த கோயில் இது. மற்ற கோயில்களில், நவக்கிரகங்கள் பரிவார தேவதைகளாக மட்டுமே இருப்பர்.
*இங்கு திருமணக்கோலத்தில் உஷா, பிரத்யுஷா என்ற மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.
*சூரியன் இங்கு உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சிவசூரியனாக காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.
*இங்கு சூரியன் மட்டுமின்றி, மற்ற ஒன்பது
கிரகங்களுக்கும் தனி தனி சந்நிதி உள்ளது. கோயிலைச் சுற்றி வர தனிப்பட்ட விதிமுறையும் இருக்கிறது.
*இங்குள்ள நவக்கிரகங்களுக்கு வாகனங்கள் இல்லை.
*திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயில்இது.
*இங்கு ரதசப்தமி உற்சவம் தை மாதம் - 10 நாட்கள் நடக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா.
*தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூரியப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெறும். மகா அபிஷேகம் எனப்படும் இந்த வழிபாட்டில் பக்தர்கள் ஏராளமாக பங்கேற்பர்.
*பொங்கல், சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி நாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.
*இந்தக் கோயிலுக்குச் செல்ல ஞாயிற்றுக்கிழமை ஏற்றது. இதுதவிர ஆடி கடைசி செவ்வாய், கார்த்திகை சோமவாரம், தைமாத அஷ்டமி, மாசி சிவராத்திரி உகந்தவை.
*இந்தக் கோயிலில் உள்ள கோள் தீர்த்த விநாயகரை வழிபட்டால், கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
*மூலஸ்தானத்தின் உச்சியில், ஏழு குதிரைகளில் சூரியன் பவனி வரும் சுதைச் சிற்பம் உள்ளது.