திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் லட்ச தீப விழா நேற்று காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் பத்ர தீப விழாவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீப விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுநெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாட்டுடன் லட்ச தீப விழா நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேணுவனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக அலங்கார தீபாராதனையும், மூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சன்னதிகளில் அபி ஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டு வரும் 30ம் தேதி லட்ச தீப விழா வரை தொடர்ந்து தீபம் எரிந்து கொண்டிருக்கும். அன்று நண்பகல் 12 மணிக்கு மகேஷ்வர பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. வரும் 30ம் தேதி அன்று இரவு 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள் சன்னதி உள், வெளி பிரகாரங்கள், ஆறுமுகர் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரத வீதி வலம் நடக்கிறது.