பதிவு செய்த நாள்
21
ஜன
2014
11:01
மதுரை: மதுரை குன்னத்துார் சத்திரத்தில் மரகதலிங்கம் மாயமானது குறித்து, போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த மனு: மதுரை குன்னத்துார் சத்திரத்தில் பச்சைநிற மரகதலிங்கம் இருந்தது. அதை திருமங்கலம் அருகேவுள்ள குன்னத்துார் ஜமின்தார் தானமாக வழங்கினார். பராமரிப்பு பணிகள் எனக்கூறி, 2009 ல் சத்திரத்தை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது. மரகதலிங்கம் மாயமானது; மதிப்பு 1000 கோடி டாலர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு கடத்திவிட்டனர். தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். அறநிலையத்துறை இணை கமிஷனர், எங்கள் துறை சார்ந்த ஆவணங்களில், மரகதலிங்கம் பற்றிய குறிப்பு இல்லை. குன்னத்துார் சத்திரத்தில் மரகதலிங்கம் இருந்ததா? இல்லையா? என்பது குறித்த முடிவுக்கு வரமுடியவில்லை, என பதில் மனு செய்தார். நீதிபதி பி.ராஜேந்திரன் முன், நேற்று விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார், மாநகராட்சி தரப்பில் வக்கீல் முரளி ஆஜராகினர். மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த பதில் மனு: குன்னத்துார் சத்திரம் பழுதடைந்ததால், மாநகராட்சி தீர்மானப்படி 2006 ல் இடித்தோம். அங்கிருந்த பொருட்களை ராணி மங்கம்மாள் சத்திரத்திற்கு மாற்றினோம். மங்கம்மாள் சத்திரத்தை 2011 ல் புதுப்பித்தோம். அங்கு 3 இன்ச் உயரமுள்ள பச்சை வண்ண லிங்கம், தாமிர பட்டயம் இருந்தது. மரகதலிங்கம் மாயமானது குறித்து, துணை கமிஷனர் சின்னம்மாள் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைத்தோம். அக்குழு மாநகராட்சி ஊழியர்கள், குன்னத்துார் சத்திரத்தில் கடை வைத்திருந்தவர்கள் உட்பட 38 பேரிடம் விசாரித்தது. மரகதலிங்கம் இருந்தததாக தெரியவில்லை என 28 பேர், 3 இன்ச் உயரத்தில் லிங்கம் இருந்ததாக 10 பேர் தெரிவித்தனர். அந்த லிங்கத்தை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் ஸ்படிகலிங்கம், அதன் மதிப்பு 6000 ரூபாய் என உறுதியானது. தாமிர பட்டயத்தை தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மரகதலிங்கம் இருந்ததற்கான குறிப்பு இல்லை என்றனர். ஸ்படிக லிங்கம் மாநகராட்சி வசம் உள்ளது, என குறிப்பிட்டார். நீதிபதி, மனுதாரர் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தல்லாகுளம் போலீசார் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.