பதிவு செய்த நாள்
08
பிப்
2014
11:02
சேந்தமங்கலம்: நைனாமலை வரதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வர ஸ்வாமி கோவிலில், திருத்தேர் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது நாமக்கல், சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் சோமேஸ்வர ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசிமக தேர்த்திருவிழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 9.15 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகம், ஆராதனை நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (ஃபிப்., 8) துவங்கி, ஃபிப்ரவரி, 14ம் தேதி வரை, தினமும், காலை, 10.30 மணிக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி சிம்மம், மயில், கருடன், பூதம், ரிஷபம், யானை, குதிரை போன்ற வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஃபிப்ரவரி, 15ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து, மாலை, 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஃபிப்ரவரி, 16ம் தேதி தேர் நிலை சேர்கிறது. 17ம் தேதி, காலை, 10 மணிக்கு, சோமேஸ்வரர் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, கைலாச வாகனத்தில், ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18ம் தேதி, காலை, அபிஷேகமும், இரவு, 8 மணிக்கு வெள்ளி பல்லக்கில் ஸ்வாமி எழுந்தருளுகிறார். 19ம் தேதி, காலை, 10 மணிக்கு அபிஷேகமும், இரவு, 8 மணிக்கு விடையாத்தி உற்சவம் நடக்கிறது.