பதிவு செய்த நாள்
18
பிப்
2014
10:02
குடும்பம் மற்றும் தொழில் ரீதியாகவும், இன்னும் பல வகைகளிலும் நமக்கு எதிரிகள் இருப்பர். அவர்கள் நமக்கு செய்த கெடுதல்கள், மன்னிக்க முடியாத அளவில் கூட இருக்கும். இருப்பினும், அப்படிப்பட்டவர்களையும் மன்னிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதையே, எறிபத்தர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. புகழ்ச்சோழ மன்னர், கரூரை ஆண்ட காலத்தில், அங்கு எறிபத்தர், சிவகாமியாண்டார் என்ற சிவபக்தர்கள் வாழ்ந்து வந்தனர். கரூரில் அருள்பாலிக்கும் பசுபதீஸ்வரரை தினமும் வணங்கி வந்தனர். சிவகாமியாண்டார், பசுபதீஸ்வரருக்கு தினமும் பூஜைக்குரிய பூக்களை பறித்துச் சென்று கொடுத்து, சிவ கைங்கர்யம் செய்து வந்தார். ஒருநாள், அவர் பூக்கூடை யுடன் வரும் போது, மன்னரின் பட்டத்து யானை, மதம் பிடித்து ஓடி வந்தது. மக்கள் அலறியடித்து ஓட, சிவகாமியாண்டாரும் பயத்தில் ஒதுங்கி நின்றார். அப்போது, யானை, சிவகாமியாண்டார் கையிலிருந்த பூக்கூடையை பிடுங்கி வீசியது. தன்னை ஏதும் செய்திருந்தால் கூட, சிவகாமியாண்டார் பொறுத்திருப்பார். ஆனால், சிவனுக்குரிய பூக்கூடையை பறித்து எறிந்த யானை மீது, அவருக்கு கோபம் வந்து, ஒரு கழியை எடுத்துக் கொண்டு, யானையை விரட்டிச் சென்றார். அதற்குள் யானை ஓடிவிட்டது. அப்போது, எறிபத்தர் அங்கே வந்தார். அவரிடம் எப்போதும் ஒரு மழு (கோடரி) இருக்கும். சிவபக்தர்களுக்கு யார் இடையூறு செய்தாலும், அதை வீசியெறிந்து அவர்களைக் காயப்படுத்தி விடுவார். பூக்கூடையை யானை பறித்தெறிந்த விவரத்தை அறிந்து, யானையைத் தேடிப்பிடித்து, அதன் துதிக்கையை மழுவால் வெட்ட, யானை இறந்து விட்டது. அத்துடன், யானையை அடக்க முடியாத பாகன் உள்ளிட்ட ஐந்து ஊழியர்களையும் கொன்று விட்டார்.
சம்பவத்தை அறிந்த மன்னர், யானை இறந்து கிடந்த இடத்திற்கு வந்தார். அங்கே ஐந்து ஊழியர்கள் இறந்து கிடப்பதை கண்டு கோபமடைந்தவர், அச்செயலை செய்தவர் யார் என வினவ, அங்கிருந்தோர், உடலெங்கும் திருநீறு பூசிய எறிபக்தரை காட்டினர். அவரைப் பார்த்ததும், மன்னரின் கோபம் தணிந்து, சிவனடியாரான நீங்கள் இச் செயலைச் செய்துள்ளீர்கள் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்... என்று கேட்டார். எறிபத்தரும் நடந்ததைச் சொன்னார். ஐயனே... யானையை சரிவர பராமரிக்காமல் வளர்த்த நானே குற்றவாளி; இந்த ஊழியர்களைக் கொன்றது போல், என்னையும் கொன்று விடுங்கள்... என்று, பணிவோடு வேண்டி, தன் வாளை எறிபத்தரிடம் கொடுத்தார். மன்னரின் இந்தச் செயல், எறிபத்தரின் மனதை நெகிழச் செய்து விட்டது. ஆத்திரத்தில் யானையையும், ஊழியர்களையும் கொன்று விட்டோமே என, வருந்தினார். மன்னர் நினைத்திருந்தால், ஒரு விலங்கின் செயலுக்கு யார் பொறுப்பாக முடியும்? என கேட்டு, தன்னைக் கொன்றிருக்க முடியும். ஆனால், தன் செயலுக்கு தானே பொறுப்பு என்று கூறி, அதற்காக உயிரையும் விடத்துணிந்த இவரல்லவோ நிஜமான சிவபக்தர். தன்னை ஒரு கொலைகாரனாக கருதாமல், அன்பே சிவமென்று இவர் நிரூபித்து விட்டாரே... என, கலங்கினார். அப்போது, சிவபார்வதி ரிஷபத்தில் அங்கு தோன்றினர். அம்மூவரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்தவே, இவ்வாறு திருவிளையாடல் நிகழ்த்தியதாக கூறிய சிவன், இறந்தவர்களையும், யானையையும் எழச்செய்தார்; சிதறிய பூக்கூடை நிரம்பியது. மன்னிப்பு, விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற நற்பண்புகளை, உலகம் அறிய காரணமாய் இருந்த எறிபத்தரின் குருபூஜை, மாசி அஸ்தம் நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இந்நன்னாளில், இந்த நற்குணங்களை வளர்த்துக்கொள்ள நாமும் உறுதியெடுப்போம்.