பதிவு செய்த நாள்
03
மார்
2014
12:03
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்து வரும் நிலையில் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விழாக்களில் முக்கியமானது மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா. தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும் இந்த விழாவில், தேர்திருவிழாவில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா துவங்கிய நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி, தினமும் இங்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் கோவில் நிர்வாகமும், அரசுத்துறையினரும் அலட்சிய போக்கை கடைபிடித்து வருகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு கட்டியுள்ள இரண்டு அரங்குகளும் பல நாட்களாக, அசுத்தமான நிலையில் உள்ளது. இந்த தரைகளில் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் இங்கு உட்கார கூட முடியாத நிலை உள்ளது. இதை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் விட்டதால் இத்தனை நாள் பிச்சைக்காரர்களின் இருப்பிடமாக இருந்தது. விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக அவசர, அவசரமாக பிச்சை காரர்களை இங்கிருந்து விரட்டி அடித்தனர். குறைந்த அளவில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதால் நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் பிச்சைக்காரர்கள் தங்கி இருந்த துர்நாற்றம் வீ”ம் வளாகத்தில் தங்கி வருகின்றனர்.
இங்கு பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. உண்பது, உறங்குவது, கழிப்பிடம் என எல்லாம் இதன் அருகிலேயே நடக்கிறது. பணம் வசூலிக்கும் மொட்டை அடிக்கும் இடத்தில் பக்தர்கள் குளிப் பதற்கு போதிய வசதிகள் இல்லை. திறந்த வெளியில் தண்ணீர் தொட்டியை அமைத்து அதில் குளிக்கும் நிலை உள்ளது. அடிக்கடி இங்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பக்தர்கள் விவசாய பம்பு செட்டை தேடி செல்லும் நிலை ஏற்படுகிறது. ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் குடிநீர் குழாய்களை அமைத்துள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் இடத்தில் இந்த குடிநீர் குழாய்கள் 10 சதவீதம் தேவையை கூட பூர்த்தி செய்ய வில்லை. இதனால் பாட்டிலில் அடைத்து விற்கும் தரமற்ற குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.
பக்தர்களுக்கு என இலவச கழிப்பிட வசதிகள் இல்லை. எனவே பக்தர்கள் கோவில் அருகே உள்ள ஏரி மற்றும் விவசாய நிலங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இது போன்று செல்லும் பக்தர்கள் அடிக்கடி கிணற்றில் தவறி விழுந்து இறக்கின்றனர். கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள விடுதிகள் நோய் பரப்பும் மையமாக மாறி வருகின்றன. இங்கு தங்கும் பக்தர்களுக்கு ஒரே நாள் இரவில், நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இவற்றை கண்காணித்து தூய்மையாக பராமரிக்க சுகாதாரத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்தர்களின் வசதிக்காக பல கோடி மதிப்பில் துவங்கிய விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் எல்லா பணிகளும் அரைகுறையாக உள்ளன. கோவில் பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே சாக்கடை நீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதில் பக்தர்கள் அறுவெறுப்புடன் நடந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையினருக்கான அலுவலகம், அதிகாரிகளுக்கான குடியிருப்பு ஆகியவற்றை அனைத்து வசதிகளுடன் உருவாக்கி உள்ள நிர்வாகத்தினர், பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வில்லை. பக்தர்களின் தேவையான சாதாரண தண்ணீருக்கும் முழுமையான ஏற்பாடுகளை செய்ய வில்லை.அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், தங்கும் வசதிகளை செய்து தருவதில் காட்டும் அலட்சியமும், மெத்தன போக்கும் பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.