பதிவு செய்த நாள்
12
மார்
2014
10:03
செஞ்சி: செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் சிலை பிரதிஷ்டை குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையில் மிகப் பெரிய வெங்கட்ரமணர் எனும் திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இக் கோவிலை இந்திய தொல்லியல் துறை பராமரிக்கிறது. இங்கு வழிபாடு நடத்துவதை தடை செய்யக் கூடாது என செஞ்சியை சேர்ந்த ராமச்சந்திர ராமானுஜதாசர், சீத்தாராமன், பூங்காவனம், உத்தரவேல், தேவராஜ், பொன்னுசாமி ஆகியோர், செஞ்சி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். வழக்கறிஞர்கள் பூபதிபிள்ளை, ராஜேந்திரன், கண்ணதாசன், கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, வாதாடினர். மனுவை பரிசீலித்த நீதிபதி வெங்கடேசன், மனுதாரர்கள் மற்றும் இந்து வழிபாட்டு பொது மக்கள் வெங்கட்ரமணர் கோவிலில் விக்ரகங்கள் வைத்து, காலை 8.00 மணி முதல் மாலை 5.௦௦ மணி வரை தினமும் வழிபாடு செய்ய, இம்மாதம் 14ம் தேதி வரை தடையோ, இடைஞ்சலோ செய்யக் கூடாது என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். நேற்று பகல் 2.00௦௦ மணிக்கு, செஞ்சி பகுதியை சேர்ந்த பஜனை கோஷ்டியினர் மற்றும் பொது மக்கள் இந்திய தொல்லியல் துறை அலுவலகம் எதிரிலிருந்து ஊர்வலமாக வெங்கட்ரமணர் கோவிலுக்கு சென்றனர். கருவறையில் வெங்கட்ரமணர், பூதேவி, ஸ்ரீதேவி, கருடாஷ்வார், பலி பீடம் ஆகியவற்றை வேதாகம விதிப்படி பிரதிஷ்டை செய்து, தீபாராதனை செய்தனர். கணேஷ்குமார் எம்.எல்.ஏ., உட்பட வெளிநாட்டு பக்தர்களும் தரிசனம் செய்தனர். அதையடுத்து, செஞ்சி கோட்டை பராமரிப்பு அலுவலர் வரதராஜசுரேஷ், செஞ்சி போலீசில் கொடுத்த புகாரில், ராமச்சந்திர ராமானுஜதாசர், சீத்தாரமன், பூங்காவனம், உத்தரவேல், தேவராஜ், பொன்னுசாமி ஆகியோர், கோட்டை ஊழியர் மகாலிங்கத்தை பணி செய்ய விடாமல் தடுத்து, கோவில் பூட்டை உடைத்து, சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியதாக கூறி உள்ளார். இப்புகார் மீது, செஞ்சி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.