ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2014 11:03
ஆனைமலை : ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் நுாற்றுக்கும் அதிகமான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.ஆனைமலையில் உள்ள நூறு ஆண்டுகள் பழமையான திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், நேற்றுமுன்தினம் இரவு குண்டத்தில் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து நேற்று காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த பக்தர்கள், உப்பாற்றில் நீராடியபின் கோவிலில் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். காலை 9.00 மணிக்கு அருளாளி தெண்டபாணி பூ செண்டினை குண்டத்தின் உள்ளே உருட்டி, அம்மனின் உத்தரவினை பெற்ற பின் அவர் முதலில் குண்டத்தில் இறங்கினார். இதனையடுத்து நுாற்றுக்கும் அதிகமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கிய பின், சித்திரை தேரில் காட்சியளித்த திரவுபதியம்மனை வணங்கினர். குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நிறைவடைந்த பின் குண்டம் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த தேரை பக்தர்கள் இழுத்து வந்து கோவில் அருகில் நிறுத்தினர். தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியில், வால்பாறை டி.எஸ்.பி சக்திவேல், கோவில் நிர்வாகத்தினர், விழாக்கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.