பதிவு செய்த நாள்
27
மார்
2014
10:03
காரைக்கால்: காரைக்கால் கடைத்தெருவில் அமைந்துள்ள மாரியம்மன், விநாயகர், பெரியாச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காரைக்கால் கயிலாசநாதர் ஸ்ரீ நித்ய கல்யாணப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த கடைத்தெருவில் மாரியம்மன், விநாயகர், பெரியாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து மாரியம்மன், விநாயகர், பெரியாச்சி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. விழாவையொட்டி கடந்த 21ம் தேதி காலை 5 மணிக்கு அனுக்ஞை விநாயகர் பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 23ம் தேதி காலை 9 மணிக்கு திசாஹோமமும் நடந்தது. 24ம் தேதி மாலை 5 மணிக்கு முதற்கால யாக பூஜையும், 25ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று 26ம் தேதி காலை 8 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் முடிந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டது. காலை 9.25 மணிக்கு அனைத்து விமானங்கள் ராஜகோபுரம்சமகாலத்தில் கும்பாபிஷேகமும் தீபாரதனையும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மூலஸ்தான மூர்த்திக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் சமகாலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று 27ம் தேதி மண்டல அபிஷேகம் துவங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர், பொது மக்கள் செய்திருந்தனர்.