பதிவு செய்த நாள்
27
மார்
2014
10:03
பழநி : பங்குனி உத்திரவிழா நடைபெறும் 10 நாட்களிலும், பழநியில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படும், என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பழநி பங்குனி உத்திரவிழா முன்னேற்பாடுகள் குறித்த, ஆலோசணை கூட்டம் கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. கோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், ஆர்.டி.ஓ., சுந்தர்ராஜ், தாசில்தார் வரதராஜன், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
இடும்பன் குளத்தில் சுகாதாரமற்ற நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறபடுத்த வேண்டும். பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தரவேண்டும். மின்வாரிய துறையினர், ஏப்., 7 முதல் ஏப்.,16 வரை விழாநாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும், நகரின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றவேண்டும், என வலியுறுத்தப்பட்டது. நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுபணித்துறை, மருத்துவ துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். வழக்கமாக பங்குனி உத்திர ஆலோசனை கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள், பழநி நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, அவர்களிடம் கருத்துகேட்கப்படும். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர்.