புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மழை வேண்டி பெண்கள் கோமன் சிலையை சுற்றி ஒப்பாரி வைத்து நூதனமாக வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டாக பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவிவருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வறட்சி காலங்களில் மழை வேண்டி வினோத வழிபாடுகள் நடத்துவதை கிராம மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இயற்கையை மகிழ்விப்பதற்காக வருணபகவானுக்கு பொங்கலிட்டு வழிபடுதல். அரசு மற்றும் வேம்பு மரங்களை இணைத்து தாலிகட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்துவது. கோமன் பூஜை செய்வது போன்ற வினோத வழிபாடுகள் நடத்திவருகின்றனர். புதுக்கோட்டை அடுத்த திருவப்பூர் பொன்னப்பன் ஊரணி அருகே களிமண்ணால் கோமன் சிலையை உருவாக்கிய அப்பகுதி பெண்கள், அந்த சிலையை முச்சந்தியில் வைத்து வழிபாடு செய்தபின் தலைவிரி கோலத்தில் ஒப்பாரி வைத்து வழிபட்டனர். இளம்பெண்கள் சிலர் சிலையை சுற்றி கும்மியடித்து வழிபட்டனர். இருந்தும் மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாறாக வெயில் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.