பதிவு செய்த நாள்
10
ஏப்
2014
12:04
ராசிபுரம்: கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், ராசிபுரம் நகரில், நேற்று திடீரென மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதற்கிடையே, ராசிபுரம் ராஜகணபதி ஸ்வாமிக்கு ஜல நிவாஷ பூஜை நடத்தப்பட்டதால், நேற்றை மழைக்கு, பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக, மிக குறைந்தளவு மழை பெய்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடப்பாண்டு, முன்கூட்டியே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் கடந்த, ஒரு வாரமாக, 102 டிகிரிக்கு மேலாக உள்ளது. இந்நிலையில், வெயிலில் இருந்து மக்களை காக்கவும், மழை பெய்ய வேண்டியும், ராசிபுரம் கைலாசநாதர் ஸ்வாமி கோவிலில் உள்ள ராஜகணபதி ஸ்வாமிக்கு ஜல நிவாஷ பூஜை செய்ய, பக்தர்கள் ஏற்பாடு செய்தனர். அதனால், நேற்று முன்தினம், ராஜகணபதி ஸ்வாமி கோவிலின் கதவு முன்பாக, நான்கு அடி உயரத்தில் கான்கிரீட் சுவர் எழுப்பினர். அதன்பின், நேற்று காலை, மூலவர் ராஜகணபதி ஸ்வாமி மூழ்கும் அளவிற்கு, கருவறையில் தண்ணீரை ச்ஊற்றி நிரப்பி வழிபாடு செய்தனர். அதற்கிடையே, நேற்று மாலை, 4 மணிக்கு, திடீரென ராசிபுரம் நகரில், சூறாவளி காற்றுடன், அரை மணி நேரம் கடும் மழை பெய்தது. அதனால், தெருவெங்கும் வெள்ளப்பெருக்கு ஓடியது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து, அதை தணிக்கும் விதமாக பெய்த மழையால், மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.