கோயில்களில் வழிபடும் போது சிலர் நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்லி வழிபடுவர், இவ்வாறு சொல்லலாமா? ஆகமங்களில் ஆலய அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் ஆலய மூர்த்திகளைத் தொடக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ளது. பலர் நந்தி பகவானின் காதுகளில் தங்களின் பிரார்த்தனைகளைக் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். எனினும், அவ்வாறு செய்யும்போது தவறுதலாக நாம் நந்தியெம்பெருமானைத் தீண்டுவதாக அமைய நேரியடலாம். அது மட்டுமல்லாமல் நமது காற்று அவரின்மேல் பட்டாலோ, துர்நாற்றம் அவரின்மேல் பட்டாலோ அதனால் நமக்கு தோஷம் ஏற்படும். ஆகவே, இவற்றைத் தவிர்க்க நாம் நந்தியெம்பெருமானின் இடதுபுறம் வடக்கு நோக்கி நின்றுகொண்டு கைகூப்பி மிகுந்த பக்தியுடனும் மரியாதையுடனும் நமது கோரிக்கைகளை மனதினால் தெரிவிக்கலாம். கண்டிப்பாக அவை, பரம்பொருளான சிவபெருமானால் அனுக்கிரகிக்கப்படும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
மாலை 4,30- 6 மணிவரையிலான வேளைக்கு பிரதோஷ காலம் என்று பெயர். இதனை நித்ய பிரதோஷம் என்பர். தேய்பிறை அல்லது வளர்பிறையில் திரயோதசி கூடிய மாலை வேளையில் எல்லாரும் விரதம் இருப்பர். இந்த பிரதோஷ வேளையில் சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனம் புரிவதாக ஐதீகம். இதனால், நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவனை மனக்கண்ணால் தரிசிப்பது விசேஷம். நந்தியின் கொம்புக்கிடையில் சிவனை மனதால் நினைத்து தூரத்தில் இருந்து வணங்க வேண்டுமே தவிர, நந்தியின் கொம்பில் முகத்தை வைத்துப் பார்ப்பது, காதில் வேண்டுகோளைச் சொல்வது போன்றவை தவறு.