பதிவு செய்த நாள்
16
ஏப்
2014
03:04
தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, ஜய வருஷம் மீண்டும் பிறந்துள்ளது. ஜய என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம் வியனுறவே பைங்கூழ் விளையும் நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் வெஃகுவார் மன்னரிறை மேல். இந்த ஆண்டில், நல்ல மழை பெய்யும்; புன்செய் பயிர்கள் நன்றாக விளையும்; தொழில்கள் வளரும்; சுகம் பெருகும்; ஆட்சியாளர்கள் மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய்வர் என்பது இதன் பொருள். இந்த வெண்பாவின் கடைசி வரி, நமக்கு ஆறுதலைத் தருவதாக இருக்கிறது. மக்கள் இன்று விரும்புவது ஒரு நல்ல ஆட்சியை! அப்படி ஒரு ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இன்னும் சில நாட்களில், நம் கைக்கு வரப் போகிறது. ஜய ஆண்டில் நல்லாட்சி அமையுமென, நம் முன்னோர் கணித்துள்ளனர். அதற்கு தகுந்தாற்போல், ஆட்சி அமைய ஓட்டளிப்பது, நமது கடமை.
ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு கதை உள்ளது. ராஜா ஒருவர், தனக்குப் பின், வல்லவன் என்பவனே அரசனாக வேண்டுமென சொல்லி, இறந்து போனார். வல்லவனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினர் அதிகாரிகள். வல்லவனோ, நான் பதவியேற்க வேண்டுமென்றால், ஒரு நிபந்தனை. நன்மை செய்தால், நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே நேரம், தவறு செய்தால், தட்டி கேட்க வேண்டும். இதற்கு ஒத்துக் கொண்டால் தான் பதவியேற்பேன்... என்றார். மக்கள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வல்லவன் பொறுப்பேற்று அரண்மனை வாசலுக்கு வந்தார். அங்கே ஆயிரக்கணக்கான வீரர்கள் அணிவகுத்து நின்றனர். இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்? என்று கேட்டார் வல்லவன். உங்கள் பாதுகாப்புக்கு... என்றனர் அதிகாரிகள். ஒரு அரசனை பாதுகாக்க மக்களின் அன்பு மட்டும் போதும்; இவர்கள் தேவையில்லை. நாட்டுக்கு தான் பாதுகாப்பு வேண்டும்; எனக்கல்ல, இவர்கள் நாட்டின் பாதுகாப்பை கவனிக்கட்டும்... என்றார். பின், அரண்மனைக்குள் சென்றார். அங்கே நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி நின்றனர். இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்? என்று கேட்டார். இவர்கள் அரண்மனை பணியாளர்கள். தாங்கள் இடும் வேலைகளைச் செய்ய... என்றனர். தேவையில்லை... என் பணிகளைக் கவனிக்க என் மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களை வேறு பணிக்கு மாற்றுங்கள்... என்றார். குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றும் தலைவர்கள் நமக்கு தேவையில்லை. மக்களோடு கலந்து, அவர்களின் தேவைகளைக் கவனிப்பவர்களே தேவை. அவர்களை, ஜய ஆண்டு நமக்கு தரட்டும்.