காரைக்கால் : காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில், புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு, இயேசு கிறிஸ்து உடலுக்கு மரிக்கொழுந்து மலர் வைத்து முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்த தினம், புனிதவெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளி தினத்தை முன்னிட்டு, சிலுவைப் பாதை ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, இறை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை நிகழ்ச்சியும் நடந்தது. சிலுவையை ஆலய பங்குத்தந்தை சுமத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. ஆலய பங்குத் தந்தை ஆண்டனி லுார்துராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று, இயேசு கிறிஸ்து உடலுக்கு மரிக்கொழுந்து, மலர்கள் வைத்து முத்தமிட்டு, அஞ்சலி செலுத்தினர்.