பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
10:04
ஆண்டிபட்டி: நீர்வரத்து இல்லாததால், வைகை அணை வற்றி வருகிறது. இருப்பில் உள்ள நீரை, இன்னும் சில நாட்களே பயன்படுத்த முடியும் என்ப தால், மதுரை சித்திரை திருவிழா வில், கள்ளழகர், வறண்ட வைகை ஆற்றில் இறங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை குறைவு : வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில், கடந்த ஆண்டு, தேவையான மழை பெய்யவில்லை. மழை குறைவால், அணை நீர்மட்டம், 60 அடி ஆனது. அணையின் நீர்மட்டம், 71 அடி. அணையில், இருப்பில் உள்ள நீரை, குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இருப்பில் உள்ள நீரை, தேனி, மதுரை உட்பட, ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு, இன்னும் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அணையில் மண்படிவு அதிகம் இருப்பதால், 20 அடிக்கு கீழ் உள்ள நீரை மதகு வழியாக வெளியேற்றி பயன்படுத்த முடியாது. நேற்று, வைகை அணை நீர் மட்டம், 24.02 அடியாக இருந்தது. பல மாதங்களாக, அணைக்கு நீர் வரத்து இல்லை. மதுரை, சேடபட்டி, -ஆண்டிபட்டி குடிநீருக்காக, வினாடிக்கு, 40 கன அடி வெளியேற்றப்படுகிறது. பெரியாறு அணை நீர் இருப்பும் கவலை அளிப்பதாகவே உள்ளது.
குடிநீருக்கே சிக்கல் : மே 14ல் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, பெரியாறு, வைகை அணையில் இருந்து, வழக்கமாக கூடுதல் நீர் திறந்து விடப்படும். தற்போதுள்ள சூழலில், குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, தண்ணீர் திறப்பது சாத்தியமே இல்லாததால், கள்ளழகர் வறண்டு போன வைகையில் இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.