பதிவு செய்த நாள்
03
மே
2014
10:05
திருப்பூர் லட்சுமி நகர், 50 அடி ரோட்டில், உண்ணாமுலையம்மன் உடனமர் அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன், சாமை மட்டும் விளையும், விவசாய நிலமாக இருந்துள்ளது. அக்காலத்தில், சிறிய குடியிருப்பு மட்டுமே இருந்துள்ளது. விவசாய நிலத்துக்கு மத்தியில், அரச மரத்தடியில் அம்ச விநாயகர் மற்றும் சிவாலயம் அமைந்திருந்ததாகவும், அங்கு வாழ்ந்த மக்கள் வழிபட்டு வந்ததாகவும் சொல்கின்றனர்.
லட்சுமி நகர் என்ற குடியிருப்பு உருவானதும், அரசு மரத்தடியில் இருந்த கோவிலை, பெரிய சிவாலயமாக கட்டலாம் என அப்பகுதியை சேர்ந்த பலர் முயற்சித்தும் முடியவில்லை. கோவிலை கட்டியே தீருவோம் என்ற முடிவோடு, இப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி, சிவாலயம் அமைத்துக் காட்டியுள்ளனர்.
திருவண்ணாமலைக்கு, கிரிவலம் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த அவர்கள், அங்கிருந்து பிடி மண் எடுத்து வந்து, அதேபோல், அருணாச்சலேஸ்வரருக்கு திருப்பூரில் ஆலயம் அமைத்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை போலவே, மூலவர் மற்றும் அம்பாள் சிற்பங்கள் வடித்து, பிரதிஷ்டை செய்துள்ளனர். இதற்காக, நிதி வசூலித்து, கல், மணல் வாங்குவது முதல் அனைத்து பணிகளையும் பெண்களே மேற்கொண்டுள்ளனர். பல்வேறு சிவாலயங்களுக்கு நேரில் சென்று, கோவில் அமைப்பை முடிவு செய்துள்ளனர். பெண்களால் உருவாக்கப்பட்ட சிவாலயம் என்ற பெருமையை பெற்றுள்ளது.கோவில் அமைப்பு: கல் கட்டுமான கோவிலான இங்கு, சிவன் மத்தியில் எழுந்தருளியுள்ளார். ஆவுடையார் மற்றும் லிங்கம் பெரிய அளவில் அமைந்து, பீடம் உயரமாக உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மூலவரை போலவே லிங்கம், நந்தி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.வலதுபுறம் நின்ற கோலத்தில், உண்ணாமுலையம்மன் எழுந்தருளியுள்ளார். இடதுபுறம், வேலுடன் பாலமுருகன் சன்னதியும், அம்பாளுக்கு வலதுபுறம் கன்னி மூல கணபதி சன்னதியும் அமைந்துள்ளன.தாய், தந்தையருக்கு இருபுறமும், இரண்டு மகன்கள் எழுந்தருளியுள்ளது இக்கோவிலின் சிறப்பு.
அரச மரத்தடியில் அம்ச விநாயகர் சிலை உள்ளது. தாமரை பூவில் நவக்கிரங்கங்கள், வாகனங்களுடன் நின்ற கோலத்தில் அமைந்துள்ளதும், வட்டம் வடிவ சன்னதி, சதுர பீடத்தில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதும் சிறப்பாக <உள்ளது.
சிவ துர்க்கை, நவக்கிரங்களுக்கு அருகில், தனி சன்னதியில் கால பைரவர் அமர்ந்துள்ளார். சிவாலயங்களுக்கு உரிய தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் உள்ளன. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், சிவகாமி உடனமர்
நடராஜர், பிரதோஷ நாயகர் உள்ளிட்ட உற்சவர் சிற்பங்களும் உள்ளன. இங்கு, பிரதோஷம், அமாவாசை தேய்பிறை அஷ்டமி, பவுர்ணமி பூஜைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. எந்த காரியத்தை நினைத்து வேண்டினாலும், குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறும் என்ற நம்பிக்கையும், எத்தனை பிரச்னைகளோடு இக்கோவிலுக்குள் வந்தாலும், அமைதியும், சாந்தமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இப்பகுதி மக்களிடம் உள்ளது.