ஆர்.கே.பேட்டை : கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபட்டனர். சிறுவர்கள் மாறுவேடம் அணிந்து, நேர்த்திக்கடனை செலுத்தினர். சித்திரை மாதம், செவ்வாய்க்கிழமைகளில் கங்கையம்மனுக்கு ஜாத்திரை நடத்தப்படும். நான்கு வாரங்களில் பல்வேறு கிராமங்களில், அம்மனுக்கு விழா நடத்தப்படும். நேற்று, ஆர்.கே.பேட்டை, கே.பி.என்.கண்டிகை, அம்மையார்குப்பம், ஆனந்தவள்ளிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கங்கையம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது.ஜாத்திரையை ஒட்டி, வேப்பிலை தோரணங்களால் கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில், கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். மதியம் ஊழ் வார்த்தனர். சிறுவர்கள், மாறுவேடம் அணிந்து நேர்த்திக்கடனாக காணிக்கை செலுத்தினர்.மாலையில், அம்மனுக்கு மலர் அலங்காரம் நடந்தது. பின், வாண வேடிக்கையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.