துவரங்குறிச்சி: லெஞ்சமேடு கைகாட்டியில் மழை வேண்டி குட்டியப்பன் உருவம் செய்து சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே லெஞ்சமேடு கைகாட்டி, லெஞ்சமேடு, மேடுகாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மழை வேண்டி மூன்று நாட்களாக வீடு தோறும் மழைக்கஞ்சி எடுத்து நேற்று குட்டியப்பன் உருவம் செய்தனர். பின்னர் ஊர் முட்டத்தில் வைத்து பெண்கள் கும்மி அடித்து ஒப்பாரி வைத்து ஊர் கூடி மாலை போட்டு, வாய், கை கட்டி தேரில் வைத்து ஊர்வலமாக சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இறந்த மனிதனுக்கு செய்யும் அனைத்து இறுதிச்சடங்குகளையும் செய்தனர். இதில் லெஞ்சமேடுகைகாட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். குட்டியப்பன் உருவம் செய்து இதுபோன்ற சடங்குகளை செய்தால் அந்தப்பகுதியில் நல்ல மழை பெய்யும் என்பது ஐதீகமாகும்.