பதிவு செய்த நாள்
10
மே
2014
12:05
அவிநாசி : அவிநாசியில், இன்றும், நாளையும் நடக்கும் தேரோட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பூர நட்சத்திரத்தில், பெரிய தேரில் சோமாஸ்கந்தர், சிறிய தேரில் கருணாம்பிகை அம்மன் மற்றும் விநாயக பெருமான், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜர் ஆகிய மூர்த்திகள், அந்தந்த தேர்களிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அவிநாசி வட்டார கிராமங்கள் மற்றும் திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளியூரை சேர்ந்த பக்தர்கள், வரிசையில் காத்திருந்து, தேரில் சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு நீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று நடக்கும் தேரோட்டத்துக்காக, சக்கரங்களுக்கு வடக்கயிறு, ஹைட்ராலிக் ஜாக்கி பொருத்தும் பணி நேற்று நடந்தது.
போக்குவரத்து மாற்றம் : இன்று காலை 9.30 மணிக்கு சுவாமி தேரோட்டம் (பெரிய தேர்) நடக்கிறது. அதையொட்டி, கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள், கால்நடை மருத்துவமனை வழியாக முத்துசெட்டிபாளையம், சேவூர் ரோடு சென்று, ராயம்பாளையம் வழியாகவும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், மங்கலம் ரோடு, ராயன் கோவில், ஆட்டையாம்பாளையம் வழியாகவும் செல்ல வேண்டும். இன்று மதியம், பெரிய தேர் நிலையை அடைந்தவுடன், வழக்கமான ரோட்டில் போக்குவரத்து இருக்கும். நாளை காலை, அம்மன் தேரோட்டத்துக்கும் (சிறிய தேர்) இதேபோல், போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இன்று காலை 9.00 மணி முதல் மாலை வரை தேர் வலம் வரும் வீதிகளில், கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.