பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், கருடசேவை உற்சவம், நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 5ம் தேதி மாலை, அங்குரார்ப்பணம் மற்றும் 6ம் தேதி காலை, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 5ம் நாள் உற்சவமான கருடசேவை, நேற்று முன்தினம் இரவு நடந்தது.ஸ்தலசயனப் பெருமாள், அன்று காலை அலங்கார பல்லக்கில், நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி, பூதத்தாழ்வார் சன்னிதியில் மண்டகப்படி நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமி வீதியுலா சென்றார். ஆதிவராகப்பெருமாள் கோவில், திருக்குளம், கிருஷ்ண மண்டபம், கருக்காத்தம்மன் கோவில், கங்கைகொண்டான் மண்டபம், பூதத்தாழ்வார் அவதார தலம் ஆகிய இடங்களில், அவருக்கு மண்டகப்படி நடந்தது. பிற்பகல் கோவில் திருமஞ்சன மண்டபத்தில், சுவாமி எழுந்தருளி, அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்தார்.இரவு, ஸ்தலசயனப் பெருமாள் கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் தோன்றி, பேருந்து நிலைய பகுதி இயல் மண்டபத்தில் மண்டகப்படி நடந்தது. வேத பிரபந்தம், மங்கல வாத்திய முழக்கம், வாண வேடிக்கையுடன் வீதியுலா சென்றார். கங்கைகொண்டான் மண்டபத்தில், மண்டகப்படி சேவை நடந்தது.