பதிவு செய்த நாள்
12
மே
2014
05:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் போது சூடிக்கொள்ளும் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, வஸ்திரம் ஆகியன ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு சென்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வைணவ கோயில்களில் மிக முக்கியமான கோயிலாகும். இங்குள்ள வடபத்ரசாயி பெருமாளுக்கு ஆண்டாள் சூடிக்களைந்த மாலை தினம் சாற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவ விழாவின் 5ம் நாளன்று கருட சேவையன்று ஸ்ரீவி.,யிலிருந்து ஆண்டாள் சூடிக்களைந்த மாலை சாற்றுவது வழக்கம். ஸ்ரீரெங்கத்தில் ரெங்கராஜ பெருமாளுக்கு சித்திரை தேரோட்டத்தின் போதும் ஆண்டாள் சூடிக்களைந்த கிளி, வஸ்திரம் போன்றவைகள் சார்த்தபடுகிறது.
அது போல் ஆண்டு தோறும் மதுரை அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்துடன் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி , வஸ்திரத்தை சூடி வைகையற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதே போல் இந்தாண்டு சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகையாற்றில் நிகழ்ச்சியில் சாற்றப்படும் மாலை, கிளி, வஸ்திரம் ஆகியன ஆண்டாளுக்கு மாலை சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் மாட வீதி , கந்தாடை வீதி வழியாக ஆண்டாள் சூடிய மாலை சுற்றி வரப்பட்டது. பின் அவற்றை ஸ்தானிகர் ரமேஷ் தலைமையில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீவி.,யிலிருந்து செல்லும் மாலை, தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் நாளை (மே.13)இரவு கொண்டு செல்லப்படும். அங்கு நள்ளிரவு 12 மணிக்கு சுந்தரராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து பின் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, வஸ்திரங்கள் சார்த்தப்படும். பின் அவற்றுடன் சுந்தரராஜ பெருமாள் வைகையாற்றி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் ராமராஜா, வேத பிரான் பட்டர் சுதர்சனன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.