பதிவு செய்த நாள்
14
மே
2014
01:05
தேனி:தொடர்ந்து பெய்து வரும் மழையால், இன்று நடைபெறும் மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில், பக்தர்கள் வழிபடும் நேரம் வழக்கத்தை விட, 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.தமிழக எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று நடக்கும், சித்திரை திருவிழா இன்று காலை 5:00 க்கு துவங்குகிறது. கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருவதால், கோயிலுக்கு செல்லும் பாதைகளும், சுற்றுப்பகுதிகளும் சகதிக்காடாக காட்சியளிக்கிறது.கோயிலுக்கு செல்லும் பளியன்குடிசை மலைப்பாதையும், குமுளி வழியாக செல்லும் ஜீப் பாதையும், சகதி நிறைந்து வழுக்குவதால், பக்தர்கள் மிகவும் கவனமுடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சகதியில் வழுக்கி விழுந்து, காயமடையும் பக்தர்களுக்கு, சிகிச்சை அளிக்க, மருத்துவக் குழுக்கள், அவர்களை மீட்க தீயணைப்பு படையினர் தயாராக உள்ளனர். இருப்பினும், அடர்ந்த வனப்பகுதி என்பதால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் துரிதமாக செயல்படவும் முடியாது.எனவே, பக்தர்கள் சீக்கிரமே கோயிலுக்கு வந்து, கண்ணகியை தரிசனம் செய்து விட்டு, மாலை 3:00 மணிக்கு முன்பே கிளம்பி விட வேண்டும். அதற்கு மேல் கோயிலில் தங்கி, மழையில் சிக்கினால், மீண்டு வருவது சிரமம், என வனத்துறையினர்எச்சரித்துள்ளனர்.தேனி மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும், கண்ணகி கோயிலுக்கு வரும் பக்தர்கள், சீக்கிரமே வழிபட்டு, மாலை 3:00 மணிக்கு முன் திரும்பி விடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. கடந்த ஆண்டுகளில் மாலை 5:00 மணி வரை பக்தர்கள் கண்ணகியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.