பதிவு செய்த நாள்
14
மே
2014
01:05
கோவை : பதிமூன்று ஆண்டுகளுக்குபின் வந்துள்ள, சிறப்புமிக்க சித்ரா பவுர்ணமி முன்னிட்டு, சிவபெருமானை தரிசிக்க, வெள்ளிங்கிரி மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இன்று சித்ரா பவுர்ணமி; தென் கயிலாயம் என்றழைக்கப்படும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பூண்டி, வெள்ளிங்கிரி மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்களின் மலையேற்றம் நேற்று காலை துவங்கியது. கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பக்தர்களின் மலையேற்றம் ஓரளவு நிகழ்ந்து வந்தாலும், சித்ரா பவுர்ணமி தினத்தில் மலையேறுவது சிறப்பு வாய்ந்தது.
பெரும் பேறு : ஏழாவது மலை உச்சியில் வீற்றிருக்கும் ஆண்டவரை சூரிய வழிபாடுடன் வணங்க காத்திருப்பது பெரும் பேறாக கருதுகின்றனர் பக்தர்கள். இதனால், இரவில் பயணம் செய்து அதிகாலை வரை மலையில் காத்திருப்பதை விரதமாக கருதுகின்றனர். கால் கடுக்கும் பயணத்தின்போது, கையில் கொண்டு செல்லும் மூங்கில் கம்புகளின் உதவி மிக முக்கியமானது. லட்சக்கணக்கான மூங்கில் கம்புகளை தேவஸ்தானமே தருவித்து, மிகக்குறைந்த விலைக்கு, அதாவது 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் வனப்பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் என்பதால், தமிழக வனத்துறை முன்னெச்சரிக்கையாக பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அதுபற்றி அறிவுறுத்தலும் விடுத்துள்ளது.
பிளாஸ்டிக் வேண்டாம் : மலையேறும் பக்தர்களின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்கள் தன்னார்வ தொண்டர்களால் அப்புறப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மலையிலும் நீர்ச்சுணைகள் ஆங்காங்கே இருந்தாலும், குடிநீர் வசதிக்காக பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்களை அங்கேயே வீசாமல், மலையில் இருந்து கீழே இறங்கும் போது கொண்டு வரவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.இதற்காக, மலையேற்றம் துவங்கும் இடத்தில் மட்டுமல்லாமல் அடுத்தடுத்த மலைகளிலும் வனத்துறை அலுவலர்கள் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர். நேற்று காலை முதல் கடுமையான வெயில் இருந்த நிலையில், மாலையில் பெய்த மழை, மலையேறும் பக்தர்களுக்கு குளிர்ச்சியை அளித்தது.
சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு : மலையேற்ற வழியின் பெரும் பகுதி நிழல் தரும் மரங்கள் இருந்ததாகவும், களைப்படையும் நேரங்களில் இம்மரங்களின் நிழலில் இளைப்பாற முடிந்ததாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். நேற்றும், இன்றும் சேர்த்து இரண்டு லட்சம் பக்தர்கள் மலையேற்றத்தில் பங்கு கொண்டிருப்பார்கள் என, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். கோவில் சார்பில் காலை, நண்பகல் மற்றும் மாலையும், இரவு 8.00 மணி, 10.30 மணி மற்றும் அதிகாலை 4.00 மணிக்கும் சிறப்பு ஆறு கால பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், ஏழாவது மலையில் வீற்றிருக்கும் லிங்கத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. 13 ஆண்டுகளுக்குபின் வந்துள்ள சிறப்புமிக்க சித்ரா பவுர்ணமி (ஒரே மாதத்தில் இரு பவுர்ணமி வருகிறது) முன்னிட்டும், மலையேறும் பக்தர்களின் பாதுகாப்புக்காகவும் 150 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கோவையில் இருந்து சிறப்பு பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.