பதிவு செய்த நாள்
21
மே
2014
10:05
காஞ்சிபுரம் : பக்தர்கள் வெள்ளத்தில், அனந்த சரஸ் புஷ்கரணியில் வரதராஜ பெருமாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 12ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஒன்பதாம் நாள் உற்சவமாக நேற்று காலை, 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் பல்லக்கில் வீதியுலா சென்றார்.மீண்டும் காலை 9:30 மணிக்கு கோவிலை வந்தடைந்த, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் 10:00 மணிக்கு கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, சிறப்பு ஆராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் நடந்தன.அதன்பின், பகல் 10:50 மணிக்கு பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக சென்ற வரதர், நீராழி மண்டபத்தின் எதிரே உள்ள மண்டபத்திற்கு வந்தார். அங்கு, வரதர் முன்னிலையில், அனந்த சரஸ் புஷ்கரணிக்கு, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட தயிர் சாதம், பிரசாதமாக வீசப்பட்டது. பின்னர், உற்சவர் வரதராஜ பெருமாள் அனந்த புஷ்கரணியில் இறங்கினார். சுவாமியை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என, கூறியவாறு குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.சில நிமிடங்களில் அனந்த சரஸ் புஷ்கரணியில் மூழ்கி, வெளியே வந்த வரதராஜ பெருமாள், உற்சவ அறைக்கு புறப்பட்டு சென்றார். தீர்த்தவாரி உற்சவத்தை காண காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்ததனர்.