பதிவு செய்த நாள்
30
மே
2014
03:05
ஆமைகள் நாம் குடியிருக்கும் வீட்டிற்குள் வரக்கூடாது, அதேபோல், ஆமை நுழைந்த வீடு உருப்படாது என்றெல்லாம் சொல்வதுண்டு. இதில் ஆமை என்பது ஏதோ ஒரு உயிரினத்தைக் குறிப்பதல்ல. கல்லாமை, இல்லாமை, பொறாமை போன்ற ஆமைகள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதைத் தான் இப்படி குறிப்பிட்டனர். தெய்வப்புலவர் திருவள்ளுவர், ஆமையாக மாறும்படிநம்மிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ஒருமையுள் ஆமைபோல் என்னும் குறளில் ஆமைபோல ஐம்புலனையும் அடக்கி ஆளச் சொல்கிறார். ஒருபிறவியில் இதனைக் கற்றுக் கொண்டால் ஏழேழு பிறவிக்கும் நம்மைப் பாதுகாக்கும் என்கிறார். எதிரியிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க, தலை, முன்னங்கால்கள், பின்னங்கால்கள் ஆகிய ஐந்தையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது ஆமை. அதுபோல, கண், காது, மூக்கு, வாய். உடல் என்னும் ஐந்தையும் அடக்கி வாழ்பவன் வாழ்வில் உயர்வது உறுதி. ஆமையின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் விதத்தில் திருமால் கூர்மாவதாரம் எடுத்து தேவர்களைக் காத்தருளினார். அவரை வழிபட்டவர்க்கு மன அடக்கம், புலனடக்கம் ஆகிய நற்பண்புகள் ஏற்படும்.