பதிவு செய்த நாள்
02
ஜூன்
2014
01:06
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.திருத்தணி ஒன்றியம், தலையாரி தாங்கல் கிராமத்தில், புதியதாக ஷீரடி சாய்பாபா கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த மாதம் 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில், நான்கு யாகசாலை, 1,500 கலசங்கள் வைத்த கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மூன்று கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு, நான்காம் காலயாக பூஜையும், காலை, 8:30 மணிக்கு யாத்ரா தானம், காலை, 9:40 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது.காலை, 10:00 மணிக்கு கோவில் மேல் புதியதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர், மூலவர் சாய்பாபா, விநாயகர், பாலமுருகன் ஆகிய சன்னிதிகளும் கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. நண்பகல், 11:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது. அப்போது, கேரள சண்டி மேளம், மங்கள வாத்தியம் வாசிக்கப்பட்டது.விழாவில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் பாண்டியன், திருத்தணி நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, சாய்பாபாவை வழிபட்டனர்.