மூர்த்தி என்றால் உருவம். கீர்த்தி என்றால் புகழ். உருவத்தில் சிறிதானாலும் புகழில் சாதிப்பதையே இது குறிக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியும் இது தொடர்புடையதே. சில தெய்வச் சிலைகள் மிகச் சிறிதாக இருக்கும். ஆனால், அந்த தெய்வமோ சக்தி மிகுதியால் பெரரிய அளவில் புகழ் பெற்றிருக்கும். அகத்தியர் உருவத்தில் சிறியவர் தான் என்றாலும், புகழில் எல்லாரையும் விடப் பெரியவர். இது போல மனிதர்களும் தங்கள் உருவக் குறைபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், சாதிப்பதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதையே இது போன்ற முதுமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.