பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
03:06
துறையூர்: துறையூர் பெருமாள்மலை பிரம்மோற்ஸவ திருவிழாவையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமியை வழிபட்டனர்.திருச்சி மாவட்டம், தென் திருப்பதி துறையூர் பெருமாள்மலையில் பிரம்மோற்ஸவ திருவிழா, கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் காலையில், பல்லக்கிலும், இரவில் அன்னம், சிம்மம், ஹனுமந்த, சேஷ, கருட, யானை வாகனங்களில், ஸ்வாமி கிரிவல பாதையில் பவனி வந்தார்.கடந்த, 9ம் தேதி காலை, செங்குந்தர் சமூகம் சார்பில், ஸ்வாமி திருக்கல்யாணம் நடந்தது. இரவு ஸ்வாமி இந்திர விமானத்தில் வலம் வந்தார். நேற்று முன்தினம் காலை, பல்லக்கிலும், இரவு குதிரை வாகனத்திலும் ஸ்வாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, ஒன்பது மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் வீற்றிருந்தார்.தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜாத்தி, முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் விஜயராகவன், யூனியன் தலைவர் பிச்சையம்மாள், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சேனை செல்வம், அரசு வக்கீல் செந்தில்குமார், நகராட்சி தலைவர் முரளி, கோவில் செயல்அலுவலர் சீனிவாசன், ஏழு கிராம முத்திரையர் பிரதிநிதிகள் உட்பட பக்தர்கள் பங்கேற்று தேர் இழுத்தனர். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, வெங்கட்டரமணா கோவிந்தா என கோஷமிட்டபடி, தேரில் வீற்றிருந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதியை வழிபட்டனர்.தேரோட்டத்தையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீயணைப்பு துறையினர், பொதுசுகாதார துறையினர் திருவிழாவில் முகாமிட்டு சேவை செய்தனர்.அரசியல் பிரமுகர்கள் புறக்கணிப்புதிருவிழாவுக்கான அழைப்பிதழில் அமைச்சர் பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.பி.,க்கள் ரத்தினவேல், மருதைராஜா, இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் என பெயர்கள் இடம் பெற்று இருந்தது. அவர்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.