பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
03:06
திருச்சி: குமாரவயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நடந்த தேரோட்ட விழா மற்றும் பால் காவடி ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர்.தமிழக அளவில் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம், குமாரவயலூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி மாதம் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு, கடந்த, 1ம் தேதி வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நாள் தோறும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் உற்சவரின் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 4.30 மணிக்கு தேரோட்ட விழா நடந்தது. அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை மதியம், 12 மணிக்கு பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பிறகு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜை நடந்தது. இன்று மாலை, 4.30 மணிக்கு கோவிலில் சங்காபிஷேகமும், இரவு, 8 மணிக்கு தெப்ப உற்சவமும், நாளை, ஆளும் பல்லக்கு உற்சவம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறையினரும், கோவில் நிர்வாகிகளும் செய்தனர்.