பதிவு செய்த நாள்
12
ஜூன்
2014
04:06
குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கி இருப்பார். 12 ராசிகளையும் அவர் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். சுபங்களை அள்ளித்தரும் அவர் தெய்வீகத்திற்கும் வேதாந்த ஞானத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறார்.குரு பெரும்பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகளை செய்யவே விரும்புவார். அப்படியே அவர் கெடு பலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும்,அது நமக்கு படிப்பினையை தருவதற்காகத் தான் இருக்கும்.குரு பகவான் தற்போது மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு ஜூன் 13, அதாவது வைகாசி மாதம் 30-ம் தேதி அன்று நடக்கிறது.அன்று மாலை 5.57 மணிக்கு கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். (திருக்கணித பஞ்சாங்கப்படி ஜூன் மாதம் 19-ந் தேதி குருப்பெயர்ச்சி நடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது) இவர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம்தேதி வரை மிதுன ராசியில் இருப்பார். அதன்பின் கடகத்திற்கு மாறுகிறார். இவர் 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி வரை கடக ராசியில் இருப்பார். அதன்பின் சிம்மத்திற்கு மாறுகிறார். ஆனால் குருபகவான் 3-12-2014 அன்று அதிசாரம் பெற்று (முன்னோக்கி நகருதல்) சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-12-2014 வக்கிரம் அடைந்து குரு கடக ராசிக்கு போகிறார். அதன்பின் 4-7-2015 சிம்மத்திற்கு மாறுகிறார்.இவைகளை கருத்தில் கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்கள் கணிக்கப்பட்டு உள்ளது. சிலருக்கு குருபகவான் சாதகமான நிலையில் இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு மற்ற முக்கிய கிரகங்கள் ஏதேனும் நன்மை தரும் இடத்தில் அமையலாம். அப்படியே முக்கிய கிரகங்கள் எதுவும் நல்ல நிலையில் இல்லாவிட்டால்கூட கவலை கொள்ள வேண்டாம். முக்கிய கிரகங்களின் பார்வை உங்களுக்கு பக்கபலமாக அமையலாம். அந்த வகையில் குரு, சனி, ராகு, கேது கிரகங்களைக் கொண்டு பொதுவான பலன்கள் தொகுத்து தரப்பட்டு இருக்கிறது. மேலும் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் விரைவாக சுழன்று அவ்வப்போது நன்மை செய்வார்கள். மேலும் இங்கே தொகுத்து தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தால்கூட அவர்கள் ஜாதகத்தில் நல்ல திசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும். இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களால் இயன்ற பரிகாரத்தை செய்தால்போதும்.
மணம், பணம் யோகம் யாருக்கு?
ஒருவருக்கு திருமணம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி, பொன்பொருள் சேர்க்கை, ஆன்மிக ஞானம் போன்ற சுப பலன்கள் நடக்க ஜாதகத்தை ஜோதிடர் பார்க்கும் போது, வியாழநோக்கம் வந்தாச்சா? என்று தான் பார்ப்பார். ஏனென்றால், குரு சஞ்சரிக்கும் ராசியை விட, பார்க்கும் ராசிகளுக்கே பலம் அதிகம். இதனையே,குரு பார்க்க கோடி நன்மை என்றும் சொல்வார்கள். நவக்கிரகங்களில் பூர்ண சுபகிரகம் குரு மட்டுமே. இவருக்கு 5,7,9 ஆகிய மூன்று பார்வைகள் உண்டு. இந்த முறை கடகத்திற்கு மாறும் குரு, விருச்சிகத்தை 5ம் பார்வையாலும், மகரத்தை 7ம் பார்வையாலும், மீனத்தை 9ம் பார்வையாலும் பார்க்கிறார். இந்த மூன்று ராசியினரும் ஓராண்டுக்குள் மேற்கண்ட பலன்களை அடையும் வாய்ப்புண்டு.
4 ராசிகளுக்கு நல்ல பரிகாரம்!
மேஷராசியினர் செவ்வாய்க்கிழமை தட்சிணாமூர்த்திக்கு குங்குமம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஜவ்வாது சேர்த்த சந்தனக்காப்பிட்டு செந்நிற பட்டு உடுத்தி செண்பகப்பூ மாலை சூட்ட வேண்டும். மாதுளை, துவரம்பருப்பு சாதம், ஜிலேபி நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும். வீரபத்திரருக்குரிய காயத்ரி மற்றும் பாடல்களைப் பாட தோஷம் விலகும்.
துலாம் ராசியினர் வெள்ளிக்கிழமையன்று தட்சிணாமூர்த்திக்கு நெய் அபிஷேகம் செய்து ஜவ்வாது, கஸ்துõரி சேர்த்த சந்தனக் காப்பிட வேண்டும். வெண்பட்டு உடுத்தி மல்லிகை மாலை சூட்டி சேமியா பாயாசம், சாம்பார் சாதம், மாம்பழம் நைவேத்யம் செய்து தட்சிணாமூர்த்தி, சுக்கிரன், சக்கரத்தாழ்வார் காயத்ரி மற்றும் பாடல்களைப் பாட வேண்டும்.
கடகராசியினர் திங்களன்று தட்சிணாமூர்த்திக்கு பாலபிஷேகம்செய்து அன்னக்காப்பிட வேண்டும். சந்தனக்கலர் பட்டு உடுத்தி, வாழைப்பழம், சாத்துக்குடி, முள்ளங்கி சாம்பார் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அம்பாள் மற்றும் சந்திரனுக்குரிய காயத்ரி, பாடல்களைப் பாட வேண்டும்.
தனுசு ராசியினர் தட்சிணாமூர்த்திக்கு எலுமிச்சை சாறு கலந்த பன்னீர் அபிஷேகம் செய்ய வேண்டும். கொண்டைக்கடலையால் காப்பிட்டு, முல்லைப்பூ மாலையிட்டு மஞ்சள் பட்டு உடுத்த வேண்டும். ஆரஞ்சு, சர்க்கரை கலந்த வேகவைத்த கடலைப்பருப்பு உருண்டை, எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்ய வேண்டும். தட்சிணாமூர்த்தி, குரு, தத்தாத்ரேயர் காயத்ரி ஓதி வர நல்வாழ்வு அமையும்.
குரு ஸ்லோகம்!
குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேஸ்வர: குருர் சாக்ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.
குரு காயத்ரீ!
விருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு பிரசோதயாத்
குரு பெயர்ச்சி பலன்கள் அறிய கிளிக் செய்யவும்..