பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
நாள்தோறும் அந்திப்பொழுதில் ஹரித்வாரிலும் காசியிலும் கங்கைக்கு ஆரத்தி நடக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் கங்கை கடலோடு கலக்கும் சங்கமத்தில் நடைபெறும் வைபவ கங்கா சாகர் மேளா
பொங்கல் என்று நாம் கொண்டாடும் மகர சங்கராந்தி தினத்தன்று, கங்கை நதியானது வங்காள விரிகுடா கடலில் சேரும் இடத்தில் கங்கா சாகர் மேளா நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில், சூரியன் தனுசு ராசியிலிருந்து மகரராசிக்குள் பிரவேசிக்கும் நாளில் இவ்விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் மற்றும் சன்னியாசிகள் கங்கை கடலுடன் சேரும் இடத்தில் நீராடுகிறார்கள். இதனால், அவர்களின் பாவங்கள் விலகி விடும் என்ற உறுதியான நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இதற்கு புராண அடிப்படையும் உண்டு.
ஒருசமயம், சகரன் என்னும் மன்னனின் 60,000 புதல்வர்கள் கபில முனிவரை அவமதித்து இழிவுபடுத்தினர். இதனால், கோபம் கொண்ட கபிலர் அவர்களை தபோ சக்தியினால் சாம்பலாக்கி விட்டார். அவர்களுக்கு வாரிசு இல்லாததால், அவர்கள் கடைத்தேற ஒருவரும் அவர்களுக்கு பித்ரு கர்மா (திதிகொடுப்பது) செய்யவில்லை. அதன் பயனாக சகர மன்னனின் நாட்டில், வறட்சியும் பஞ்சமும் தலை விரித்தாடியது.
அவர்கள் வம்சா வழியில் வந்த பகீரதன் தன் ஆட்சியில் மக்கள் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பதற்குக் காரணம் என்ன? என்று தன் குல குருவிடம் கேட்டான். அவர், உன்னுடைய மூதாதையர் 60, 000 பேர் கபில முனிவர் சாபத்தால் சாம்பலாகி விட்டனர். அவர்களுடைய அஸ்தியை புனிதமான கங்கையில் கரைத்தால், அவர்கள் சாப விமோசனம் பெற்று நல்லுலகம் செல்வர். அப்போது, நாடு சுபிட்ச நிலைக்குத் திரும்பும் என்றார்.
தேவலோகத்தில் உள்ள கங்கையை எப்படி பூவுலகுக்குக் கொண்டு வருவது? என்று பகீரதன் கேட்க, பிரம்மாவை வேண்டி தவம் இருந்தால் நடக்கும் என்றார் குலகுரு. பகீரதனும் பிரம்மாவை நோக்கி தவம் இயற்றினான். அவனுக்குப் பிரத்யட்சமான பிரம்மா, மகாவிஷ்ணு திரிவிக்ரம அவதாரம் எடுத்தபோது, அவருடைய பாதம் பிரம்ம லோகத்தையும் அளந்தது. அப்போது அவருக்கு நான் பாதபூஜை செய்த தண்ணீரே கங்கையாயிற்று. ஆகையால், அந்த மகாவிஷ்ணுவின் அருள் இருந்தால் உனக்கு கங்கை கிடைப்பாள் என்றார்.
பகீரதனும் அடுத்து மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தான். தவமுடிவில் மகா விஷ்ணு தோன்றி வேண்டும் வரம் யாது? என்று கேட்டார். பகீரதன், கங்கையை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று, கங்கையை அவனுடன் செல்லும்படி பணித்தார்.
அப்போது கங்கை பகீரதனிடம், நான் பூவுலகுக்கு வருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நானோ தேவலோகத்தில் இருப்பவள். நான் அவ்வளவு உயரத்திலிருந்து பாய்ந்தால், என்னுடைய வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது; அழிவுதான் ஏற்படும். ஆகையால், என்னுடைய வேகத்தைத் தாங்கக் கூடிய ஏற்பாட்டைச் செய் என்றாள்.
இதன்பின் பகீரதன் சிவபெருமானை வேண்ட அவர், தன் சடைமுடியில் கங்கை பிரவேசித்து பிறகு பூவுலகுக்கு வரட்டும். அப்போது அவள் வேகம் குறைந்துவிடும் என்று வரம் அளித்தார். இவ்விதம் கங்கை, சிவபிரான் தலைமுடி வழியாக பூமியில் பிரவேசித்தாள். பகீரதனும் தன்னுடைய மூதாதையர்கள் சாம்பலாகிப் போயிருந்த இடத்துக்கு (சாகரத்தீவு) கங்கையை அழைத்துவர, கங்கையின் புனித நீர் பட்டு, அந்த 60,000 மூதாதையரும் அவர்கள் பாபம் நீங்கி பித்ருலோகம் சென்றார்களாம்! இதன்பின்னர், நாட்டில் மழைபெய்து பஞ்சமும் விலகியது.
இது அனைத்தும் மகர சங்கராந்தி நாளில் நிகழ்ந்தது. ஆதலால், மகர சங்கராந்தியன்று கங்கை கடலில் சேரும் இடமான சாகரத்தீவில் புனித நீராடி தங்கள் பிரார்த்தனையைச் செலுத்துகிறார்கள் பக்தர்கள். இந்த சாகர் தீவு, கல்கத்தாவிலிருந்து 100கி. மீ.. டைமண் துறைமுக ரோடு வழியாக 90 கி. மீ. பயணித்து, பிறகு படகில் செல்ல வேண்டும். இதற்கு, குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.