பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம் சார்பில், 39ம் ஆண்டு கபிலர் விழா 18ம் தேதி, சுப்ரமணிய மகால் திருமண மண்டபத்தில் துவங்குகிறது. முதல்நாள் காலை 8.00 மணிக்கு கபிலர் குன்று வழிபாடு, 9.00 மணிக்கு மங்கல இசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.00 மணிக்கு பண்பாட்டுக்கழக செயலாளர் கோடிலிங்கத்தின் திருமுறை, 10.30 மணிக்கு ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையுடன் விழா துவங்குகிறது. காலை 11.00 மணிக்கு சிவசுப்பிரமணியன் தலைமையில், கபிலரின் நெஞ்சுக்கினியவர்கள் என்ற தலைப்பில் புரிசை நடராசன், அரங்க ராமலிங்கம், ராசாராம் ஆகியோர் இலக்கிய பேருரையாற்றுகின்றனர். மாலை 5.00 மணிக்கு சற்குருநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சியை, எம்.பி., ராஜேந்திரன் துவக்கி வைக்கிறார். இலங்கை ஜெயராஜ் தலைமையில், ராமகாதையில் பெரிதும் அவலம் நிரம்பிய பெண் பாத்திரம்- மண்டோதரியே, சீதையே, கைகேயியே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. 19ம் தேதி காலை 10.30 மணிக்கு அரங்க ராமலிங்கம் தலைமையில் பெரிய புராண மாண்புறு மகளிர் என்ற தலைப்பில் இலக்கிய விழா நடக்கிறது. ஒன்றியக்குழு சேர்மன் அறிவழகன் துவக்க உரையாற்றுகிறார். மாலை 5.00 மணிக்கு கபிலர் குன்றில் இருந்து விருது பெறும் அறிஞர்களின் ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் தேவிமுருகன் துவக்கி வைக்கிறார்.
பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டுகிறார். கபிலர் விருது வழங்கும் விழாவிற்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ராம சுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். டான் கே.ஆர்.சோமா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கு கபிலவாணர் விருது மற்றும் பொற்கிழியை வழங்குகிறார். விருது பெறும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி பாராட்டி, பரிசளிக்கிறார். டில்லி தமிழ்ச்சங்க முன்னாள் பொதுச் செயலாளர் எம்.என்.எஸ்.மணியனுக்குத், தமிழ் ஞாயிறு பட்டம் மற்றும் வெள்ளி பதக்கத்தை டாக்டர் கே.ஆர்.சோமசுந்தரம் வழங்குகிறார். தொடர்ந்து டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசைவிழா நடக்கிறது. 20ம் தேதி காலை 11.00 மணிக்கு, சென்னை தமிழ் இசைச் சங்க இசைக் கல்லுாரி குரலிசைத் துறை விரிவுரையாளர்கள் முத்துக்குமாரசாமி, செல்வ ஜெயந்தியின் தெய்வத்திரு பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு நாதசுர இசை அரங்கம், தேவார விரிவுரையாளர் ஹரிஹரசுப்பிரமணியன் திருமுறை இசை அரங்கம், ராஜா அண்ணாமலை மன்ற பரதநாட்டியத்துறை மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.