பதிவு செய்த நாள்
16
ஜூலை
2014
12:07
தஞ்சாவூர்: தஞ்சையில் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா மற்றும் அவர் அரியணை ஏறிய, 1,000வது ஆண்டு விழாவை சிறப்பிப்பதென, "இன்டாக் அமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் மூலமாக வட இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் வெற்றிகளை குவித்தார். அவர் அரியணை ஏறிய, 1,000வது ஆண்டு விழா மற்றும் பிறந்தநாள் விழா வரும், 25ம் தேதி நடக்கிறது. இவ்விழாவை, வெகு விமரிசையாக கொண்டாடுவதென, இந்தியன் நேஷனல் டிரஸ்ட் ஃபார் ஆர்ட் அன்ட் கல்ச்சுரல் ஹெரிடேஜ், (இன்டாக்) கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
ஆண்டுவிழாவை முன்னிட்டு, தஞ்சை பெருவுடையார் கோவிலை சுற்றி, 1,000 அகல் விளக்குகளில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான தீபச்சுடர், மாநகர் பகுதி முழுவதும் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தீபச்சுடரை எழுத்தாளர் பாலகுமாரன் ஏற்றி வைக்கிறார். தீபச்சுடர் தொடர் ஓட்டத்தை, தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் துவக்கி வைக்கிறார். தீபச்சுடர் தொடர் ஓட்டத்தை, பின் தொடர்ந்து, 1,000 இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் அணி வகுத்து செல்கின்றனர். விழா ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கோமகன், இன்டாக் மைய அமைப்பாளரும், மூத்த இளவரசருமான பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.