பதிவு செய்த நாள்
19
ஜூலை
2014
01:07
திருச்சி: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி, நேற்று திருச்சி சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட, பல்வேறு அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து விளக்கேற்றி வழிபட்டு சென்றனர்.அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நேற்று முன்தினம் பிறந்தது. நேற்று முதல் ஆடி வெள்ளிக்கிழமை என்பதால், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். திருச்சி அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். பக்தர்கள் பாதயாத்திரையாகவும் கோவிலுக்கு வந்தனர். திருவானைக்காவல் கோவிலில், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு தாழம்பூ பவாடை, மலர்கீரிடம், காதுகளில் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்ககிளி மற்றும் சிறப்பு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபராதனை ஆகியவை வெகுசிறப்பாக நடந்தது.