பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
04:07
தென்னிந்தியாவின் பழமையான கோயில்களைச் சேர்ந்த 1 லட்சம் சிலைகள், சிற்பங்களின் படங்களை புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட் நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கி சாதனை படைத்துள்ளது.பிரெஞ்சு நாட்டு அரசின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம் பிரெஞ்சு-இந்திய கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே பழமையான ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கி கணினியில் பதிவு செய்யும் பணியை செய்துள்ளது.அதேபோல் தமிழகம், கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் உள்ள கோயில்களில் உள்ள பழமையான சிலைகள், சிற்பங்கள் என மொத்தம் 1.35 லட்சம் சிலைகள் புகைப்படம் எடுக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் காஷ்மீரில் உள்ள பழமையான கோயில்கள் மற்றும் வட மாநிலங்களில் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதன் திருக்கோயில் அஜந்தா, எல்லோரா ஆகிய பகுதிகளுக்கு பிரெஞ்சு ஆய்வு நிறுவனக் குழு சென்று புகைப்பட ஆய்வு நடத்தி வருகின்றன.மொத்தம் 1.50 லட்சம் புகைப்படங்கள் உரிய ஆதாரங்களுடன் இந்நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரிய புகைப்பட சேகரிப்புப் பணி கடந்த 1956-ஆம் ஆண்டு தொடங்கியது.பழங்கால முறையில் கோயிலில் உள்ள உற்சவர் சிலைகள், கோயிலில் இதர முக்கியச் சிலைகள், கோயில் அமைப்பு ஆகியவை படங்களாக எடுக்கப்பட்டன. பழைய முறைப்படி எடுக்கப்பட்ட 1.5 லட்சம் நெகட்டிவ்கள் இங்கு உள்ளன. இந்த பழமையான நெகட்டிவ்கள் டிஜிட்டலாக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட் ஆராய்ச்சியாளர் முருகேசன் கூறியதாவது: தென்னிந்தியாவிலுள்ள தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி, நாட்டிலுள்ள முக்கியக் கோயில்களில் உற்சவர் சிலைகளை படமெடுத்து தகவல்கள் சேகரித்து பாதுகாத்து வருகிறோம்.இதுவரை 2,200 திருக்கோயில்களில் உள்ள உற்சவர் மற்றும் கோயில் விவரங்களை இங்கு பெற இயலும்.உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடவுள் குறித்த ஆய்வை நடத்துகின்றனர். இங்கு மொத்தம் 250 பிஎச்டி பட்டதாரிகள், 100 எம்.பில். பட்டதாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டுள்னர்.கடத்தப்பட்ட சிலைகளை மீட்க எங்களிடம் இருந்த புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டுதான் தமிழகத்தில் அரியலூர் புரந்தன் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் நேசனல் கேலரியில் இருப்பது தெரிய வந்தது. இதே கோயிலிலிருந்து கடத்தப்பட்ட உமா மகேஸ்வரி சிலை சிங்கப்பூர் மியூசியத்தில் இருப்பதும் தெரியவந்தது.பழமையான கோயில்களான புரந்தன் மற்றும் சுத்தமல்லி கிராமங்கள் உள்பட தமிழகத்தில் இருந்து காணாமல் போன 23 சிலைகள் தொடர்பான தகவல்கள் கேட்டு இங்கிருந்து பெறப்பட்டுள்ளன. அது தொடர்பாக படங்கள் தந்துள்ளோம். இவற்றில் ஆஸ்திரேலியாவில் உள்ள நடராஜர் மற்றும் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் மீண்டும் நாடு திரும்ப உள்ளன.இவற்றுக்கு இங்கிருந்து அளித்த புகைப் படங்கள்தான் முக்கியக் காரணம். சிலைகளுக்கான ஆதாரங்களை அந்நாட்டு அதிகாரிகள், இன்டர்போல் அதிகாரிகள் பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் கோயில் ஆய்வு தொடங்கிய காலம் முதல் லட்சக்கணக்கான புகைப்பட நெகட்டிவ் சேகரிக்கப்பட்டிருந்தன. இப்புகைப்படங்களைப் பாதுகாக்க கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். புகைப்படம் டிஜிட்டலாக்கப்பட்டு கணினியில் சேகரிக்கப்படுகிறது. இதுவரை 1 லட்சம் படங்கள் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டுள்ளன என்றார் முருகேசன்.