பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
01:07
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவில்,ஒன்றரை லட்சம் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்தனர். மலைக்கோவிலில் பக்தர்கள் அதிகளவில் கூடியதால், 10 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா கடந்த, 19ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ஆடிப்பரணியும், நேற்று, ஆடிக்கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது.ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவர் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கீரிடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைரஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில் ஆபத்சகாய விநாயகர், சண்முகர், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துர்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.பட்டு வஸ்திரம்மதியம், 1:00 மணிக்கு, திருப்பதி திருமலையில் இருந்து, கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாசரஜூ, துணை நிர்வாக அதிகாரி சின்னங்காருரமணா மற்றும் கோவில் தலைமை குருக்கள் ஆகியோர் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பட்டு வஸ்திரம் கொண்டு வந்தனர். அப்போது, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.தொடர்ந்து மூலவரை தரிசித்த பின், பட்டு வஸ்திரத்தை சண்முகப்பெருமானுக்கு அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், திருப்பதி கோவில் அதிகாரிகளுக்கு பிரசாதங்கள் கொடுத்தனர்.ஒரு லட்சம் காவடிகள்ஆடிக்கிருத்திகை, விழாவில் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சம் பக்தர்கள் மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி மற்றும் அன்னக் காவடிகள் எடுத்தும், பம்பை, சிலம்பாட்டத்துடன் பக்தி பாடல்களை பாடிவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரைவழிபட்டனர். நேற்று மட்டும் மொத்தம் ஒன்றரை லட்சம் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, 10 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். விரைவு தரிசனம் செய்வதற்காக கோவில் நிர்வாகம், 150, 100 மற்றும் 50 ரூபாய் டிக்கெட்டுகள் மலைக்கோவிலில் விற்பனை செய்யப் பட்டது.பாரிமுனையில்...பாரிமுனை, ராசப்ப செட்டி தெரு, கந்தகோட்டம் என்றழைக்கப்படும் கந்தசுவாமி கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு, பன்னீர் அபிஷேகமும் நடத்தப்பட்டது. மாலை 7:00 மணிக்கு, வெள்ளி தேரில், வள்ளி, தெய்வானையுடன் சுவாமி, மாடவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. கொத்தவால்சாவடி கன்யகா பரமேஸ்வரி கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது.வடபழனியில்...வடபழனி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம், அதையடுத்து தங்க கவச அலங்காரம், இரவு சந்தனகாப்பில் ராஜ அலங்காரம் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து பிரார்த்தனையை நிறைவேற்றினர்.இரவு, 10:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், வள்ளி, தெய்வயானை, உடன் சுப்ரமணியர் வீதி உலா நடைபெற்றது.சிங்காரவேலர் கோவிலில்...மந்தைவெளி சிங்காரவேலர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 10:00 மணியளவில், சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது.