பதிவு செய்த நாள்
26
ஜூலை
2014
11:07
ஈரோடு: குமலன் குட்டை காட்டு கோவில் என்று அழைக்கப்படும், மதுர காளியம்மன் கோவிலில், நேற்று விளக்கு பூஜை நடந்தது.ஈரோடு, குமலன் குட்டை காட்டு கோவில் என்று அழைக்கப்படும் மதுர காளியம்மன் கோவிலில், ஆடி 18 அக்னி குண்ட விழா, 17ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் துவங்கியது. அம்மை அழைத்தல், கும்பம் வைத்து சுவாமிக்கு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று காலை, திருவிளக்கு பூஜை நடந்தது.இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, வழிபாட்டில் ஈடுபட்டனர். வரும், ஒன்றாம் தேதி முனியப்பசுவாமி கோவிலில் இருந்து, மதுர காளியம்மன் கோவிலுக்கு, சீர் வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.அன்று காலை, பத்து மணிக்கு அக்னி கபாலம் கண் திறந்து எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம், இரண்டு மணிக்கு, காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வருகின்றனர்.வரும், இரண்டாம் தேதி, காவிரி தீர்த்த சிறப்பு அபிஷேகமும், அக்னி குண்டம் திறப்பும் நடந்தது.தொடர்ந்து மாலை, ஆறு மணிக்கு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், மூன்றாம் தேதி காலை, ஐந்து மணிக்கு அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, ஏழு மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், அன்னதானம், மாவிளக்கு பூஜை நடக்கிறது.வரும், நான்காம் தேதி மஞ்சள் நீர் விழா, மறு பூஜையும், ஒன்பதாம் தேதி கருப்பண்ண சுவாமிக்கு காவு பூஜை நடக்கிறது.* இதேபோல், ஆடி வெள்ளியை முன்னிட்டு, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், வாய்க்கால் மாரியம்மன் கோவில், கொங்காலம்மன் கோவில், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கள்ளுகடை மேடு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.