Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கோட்புலி நாயனார் கோட்புலி நாயனார்
முதல் பக்கம் » 63 நாயன்மார்கள்
பிற நாயன்மார்கள்!
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 மே
2011
15:35

1. தில்லைவாழ் அந்தணர்

வெள்ளைப் பிறையணிந்த வேணிபிரான் எழுந்தருளியிருக்கும் தில்லை என்னும் இத் திருத்தலம் சோழவள நாட்டிலுள்ளது. தில்லை என்பது சிதம்பரமாகும். ஓங்கி வளர்ந்த நெற்கதிர்களைத் தாங்கிய பரந்த வயல்கள் - கதிரவனைக் கண்டு களிக்கும் செங்கமல மலர்கள் நிறைந்த தடாகங்கள் - அத்தடாகங்களில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் தில்லையின் இயற்கை எழிலை எடுத்துக் காட்டின. அங்குள்ள சோலைகளில், மரங்கள் ஒன்றொடொன்று நெருக்கமாக, ஓங்கி வளர்ந்திருக்கும். அம்மரங்களில் குயில்கள் பாட, கிளிகள் கத்த, அழகு மயில்கள் தோகை விரித்தாட, அன்னப் பறவைகள் ஒலியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். நறுமணப் பூச்செடிகள் அழகிய வடிவங்களில் ஆங்காங்கே எழிலோடு காணப்படும். உயர்ந்த மதிற் சுவர்கள் - அம் மதிற் சுவற்றைச் சுற்றித் தாழைகள் நிறைந்த அகழிகள் - அத்தாழை மலர்களில் தேன் பருக வரும் கரு வண்டுகள் - மலரின் மகரந்தத்தூள் படுவதால் திருநீறு அணிந்த அடியார்களைப் போல் தோற்றமளிக்குமாம். தில்லையில் எந்நேரமும் மாமறைகளின் ஒலி எழுந்த வண்ணமாகவே இருக்கும். ஆங்காங்கே காணப்படும் நடன அரங்கங்களில் ஆடும் ஆரணங்கு அழகிகளின் சதங்கை ஒலியும் கூடவே ஒலிக்கும். வானவீதியில் எந்நேரமும் தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி, மாடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக் கருவிகளின் முழக்கமும் கேட்ட வண்ணமாகவே இருக்கும். மாலை வேளைகளில் வண்டுகளின் ரீங்கார ஓசை, அன்பின் பெருக்கால் எம்பெருமானை வழிபடும் அடியார்களின் அரகரா! சிவ! சிவா! என்ற திருநாம ஓசையோடு, சேர்ந்து தேவகனமாய் ஒலிக்கும். மாடமாளிகைகளில் வேதியர் வளர்க்கும் வேள்விப் புகை விண்ணை முட்டும். கூடகோபுரங்களில் ஆடி விளையாடும் மயில்களின் ஆட்டம் கண்களைக் கவரும். வேள்விச்சாலைகளில் வெந்தணல் ஒளிவீச, அன்னச் சாலைகளில் செந்நெல் அரிசிச்சோறு வெள்ளி மலையென ஒளியுடன் திகழ, நீண்டு, அகன்ற பெருவீதிகளில் கூடியிருக்கும் அடியார்களின் திருமேனிகளில் திருவெண்ணீறு ஒளிவீச, தில்லை வெள்ளிமாமலையெனப் பொலிவுடன் திகழும்.

தில்லையில், எந்நேரமும் சிவனடியார் கூட்டம் இருந்துக்கொண்டேயிருக்கும். அதனால் அங்கு சிவநாமம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தில்லையிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், சிவனருள் பெற்று வெண்ணீறு அணிந்த பொன்மேனி கோலத்தோடு ஆனந்தத்தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானாய் காட்சி தருகிறார். இத்தகைய பல்வளமிக்கத் தில்லையில் சிவனருள் பெற்று வாழும் அடியார்கள்தான் தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படுவோர். பொன்னாகி, மணியாகி, போகமாகி, புறமாகி, அகமாகி, புனிதமாகி, மண்ணாகி, மலையாகி, கடலுமாகி, ஆதியாகி, நடுவுமாகி, அளவிலா அளவுமாகி, பெண்ணுமாகி, ஆணுமாகி, கருணை மழை பொழியும் வள்ளலுமாகி ஆனந்தத் தாண்டவம் ஆடும் பிறையணிந்த பெருமானின் பூங்கழல்களைப் போற்றி வரும் இத்தில்லைவாழ் அந்தணர்கள் மொத்தம் மூவாயிரம் பேர் ஆவர். தில்லைவாழ் அந்தணர்கள் என்ற நாமம், எந்தத் தனிப்பட்டவரையும் குறிக்காத பொதுப்பெயர். கற்பனையைக் கடந்த ஒளி வடிவமாக விளங்கும் நடராஜ பெருமானைச் சேவிக்கின்ற மூவாயிரம் அந்தணர்களையும் மொத்தப்படுத்தித்தான் தில்லைவாழ் அந்தணர் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். பொன்னம்பலவாணரை முப்போது மட்டுமின்றி, எப்போதும் போற்றி வழிபடும் இத்திருவுடைய தில்லை மூவாயிரம் அந்தணர்கள் தெய்வத்தன்மை நிறைந்த மூவாயிரம் வேதியர்களாவர். இவர்கள் தில்லை தீட்சதர்கள் எனப் பெயர் பெற்று விளங்குபவர். இத்தில்லைவாழ் அந்தணர்கள் எப்பொழுதும், எக்காலமும், திருவெண்ணீறு அணிந்த கோலத்தினராய்- உள்ளும் புறமும் மாசற்று - அகமும், முகமும் மலர தூய வடிவினராய் விளங்குவர். பக்தியின் எல்லை கண்டு பக்குவத்தின் நிலைமை பெற்றவர். பொன்னம்பலவாணரின் குஞ்சிதபாதம் வணங்குவோர்க்கு, சஞ்சிதவினைகள் துகள்பட்டு ஒழியும் என்ற முறைமைக்கு ஏற்ப பரமனைத் தொழுது வாழுபவர் !

பொன்னம்பலத்தரசரை, வேதச் சிலம்புகள் ஒலிக்க, பூசிப்பவர் ! உயிர்களிடத்தும் பேரன்பு மிக்கவர். அறத்தையே செல்வமாகக் கொண்டவர். குற்றமற்ற அந்தணர் குலத்தில் தோன்றியவர். தூயநெறிப்படி தலைசிறந்து ஒழுகுபவர். நலம்புரியும் நாயகனுக்குத் திருத்தொண்டு புரியும் தவத்தவர். சிவத்தொண்டேதான் இவ்வடியார்களின் ஒப்பற்ற ஒரே சிந்தனை ! செயல் எல்லாம். இவர்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும், நன்கு கற்றுணர்ந்தவர். சிட்சை, வியாகரணம், சந்தோவிசிதி, திருத்தம், சோதிடம், கற்பம் என்னும் ஆறு அங்கங்களையும், மீமாம்சை, நியாஸம், புராணம், ஸ்மிருது என்னும் நான்கு உபாயங்களையும் ஐயந்திரிபுறக் கற்றவர். வேத விதிப்படி ஆகவனீயம், சாருகபத்தியம், தக்கணாக்கினி என்னும் முத்தீ வளர்ப்பவர். சிவாகமத்தில் கூறப்படும் சிரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகைப் பாதங்களையும் நன்கு உணர்ந்தவர். பிறப்பிலேயே இறைவனின் திருவருளைப் பெற்ற இவர்கள் நிலவுலகில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை வேரோடு ஒழித்தனர் என்ற பெருமையையும், பாராட்டையும் பெற்றவர். இவ்வடியார்கள் எவ்வகைக் குற்றமும் இல்லாதவர். மானமும், பொறுமையும் தாங்கி மனையறம் நடத்துபவர். செம்மையான உள்ளம் கொண்டவர். தென் தமிழ்த் தவப்பயனால் எழுந்த திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு திருவாரூரில் தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரருக்குத் திருவருள் புரிந்த புற்றிடங்கொண்ட பெருமானின் அமுதவாக்கால், தில்லைவாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுக்கப் பெற்ற பெரும் பேறு பெற்ற நற்றவமுடையவர். இங்ஙனம் மதியணிந்த பெருமானாலேயே சிறப்பிக்கப்பெற்றத் தில்லைவாழ் அந்தணர்களின் பக்தியையும், பெருமையையும், புகழையும் அளவிடுவதுதான் எங்ஙனம் ? அழ்கடலின் ஆழத்தை அளவிட முயலும் கதை போலத் தோன்றும் !

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்.

2. திரு பொய்யடிமை இல்லாத புலவர்

கலை மேவும் நீலகண்டப் பெருமானின் மலரடிக்கே ஆளான பொய்யடிமை இல்லாத புலவர்கள் தில்லைவாழ் அந்தணர்களைப் போன்ற தொகையடியார்கள் ஆவார்கள். இவ்வடியார்கள் செய்யுட்களில் காணும் சொற்களுக்கு நன்கு தெளிவாகப் பொருத்தமான பொருள் கொள்வார்கள். செம்மை தரும் பயனுடைய நூல்கள் பல கற்ற இவ்வடியார்கள் கற்றவர்க்குத் தாம் வரப்பாக விளங்குவார்கள். சித்தத்தை சிவனார் சேவடிக்கே அர்ப்பணித்த, மெய்யுணர்வு பெற்ற இவ்வடியார்கள், சிவபெருமானை மட்டுமே முக்காலமும் எண்ணினர். மெய்யன்புடன் அரனார்க்கு அடிமை பூண்டு பக்தி நூல்களை ஓதியுணர்ந்து வேத விதிப்படி அறம் வளர்த்து எம்பெருமானையே தொழுது வாழும் பேறு பெற்றனர். இப்புலவர்களுடைய அருமைகளையும், பெருமைகளையும் அளவிடுவது எங்ஙனம்! பொய்யடிமை இல்லாத இப்புலவர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறவந்த நம்பியாண்டார்  நம்பி, தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில், கடைச்சங்கப் புலவர்களாகிய கபிலர், பரணர், நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்களையும்  பொய்யடிமையில்லாத புலவர் சிறப்பித்துக் கூறுகின்றார். பரமனையே உள்ளுருகிப் பாடும் புலமை பெற்ற இப்புலவர்கள் கயிலை மலையில் திருநடனம் புரியும் பெருமானின் திருவடியை அணைந்து வாழும் பேறு பெற்ற பெருமையை யாது சொல்லி அளவிடுவது!

பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்

3. திரு பத்தராய்ப் பணிவார்

பத்தராய்ப் பணிவார்கள் என்போர் எப்பொழுதும் எம்பெருமான் திருவடிக்கே அன்பு பூண்டு பக்தியுடன் ஒழுகும் அருந்தவத்தினையுடைய தொகையடியார் ஆவர். விடையவர் திருவடியைப் பேணும் சிவனருட் செல்வர். எவரைக் கண்டாலும் தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப்போல் உள்ளம் உருகி உடல் பூரித்துப் பக்தி வெள்ளம் பெருக இன்மொழி கூறிப் பணிவர். எவரேனும் அரனாரை அர்ச்சனை புரியக் கண்டால் அவர்கள்பால் ஆராக்காதல் பூண்டு மகிழ்ந்து சிந்தை குளிர்ந்து வணங்கி இன்புறுவர். எல்லாப் பணிகளையும் சிவார்ப்பணமாக கருதுபவர். புண்ணியத்தையும் புகழையும் விரும்பாமல் மேன் மேலும் உவகை பொங்க வழிபடுவர். சிவக் கதைகளைக் கேட்டுச் சிந்தை மகிழ்வர். பிறவிப் பெருந்துன்பத்தைப் பெற்று அல்லலுறாமல் அன்பினோடு சிவப் பணிகள் புரிந்து புவனம் வியக்கப் பெரும் புகழ் பெற்று ஓங்கி நிற்பர். எம்பெருமானுடைய கமலமலர்ப் பாதங்களை அடைவதற்கு இவர்களே உரியவர்கள். சிவபெருமானை மெய்யுருக அபிஷேக ஆராதனை செய்து பூசிப்பர். இச்சிவனரும் செல்வர்க்கு பக்தியால் கண்ணீர் தாரை தாரையாகப் பெருகிவரும். அவ்வாறு பெருகி வரும் கண்ணீர் மேனியிலுள்ள திருவெண்ணீற்றை அழிக்கும். எந்நேரமும் சித்தத்தைச் சிவன்பால் அர்ப்பணித்து நிற்கும் ஒப்பற்ற அன்புச் செல்வர்கள் இவர்கள் என்றால் அஃது ஒருபோதும் மிகையாகாது ! பத்தராய்ப் பணிவார்கள், நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், துயின்றாலும், விழித்தாலும், இமைத்தாலும் ஆனந்தத்  தாண்டவம் ஆடுகின்ற ஐயனின் பொன்மலர்ப் பாதங்களையே நினைத்திருக்கும் பெருந்தகையாளர்களாக விளங்குபவர்.

பத்தராய்ப் பணிவார் எல்லார்க்கும் அடியேன்

4. திரு பரமனையே பாடுவார்

பரமனையே பாடுவார் என்ற தொகையடியார் தென்மொழியிலும் வடமொழியிலும் ஏனைய திசை மொழியிலும் அரவணிந்த அண்ணலின் புகழைப்பாடி பரவசமடைபவர்கள். உலகில் மனிதன் பிறவிப் பயனை உணர வேண்டுமென்றால் அரனாரையும் அவர்தம் அடியார்களையும் வழிபடவேண்டும் என்ற வாழ்க்கை நெறிவழி நின்று பரமனையே பாடுவர். மன்றிலே நடம் புரியும் வள்ளலையே பேரின்பம் காண பேரருள் புரியும் பெருமான் என்று உள்ளத்திலே நிலையாக வைத்து உள்ளம் உருகியபடி இன்புறுவர்.

பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்

5. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்

சிவபெருமானுடைய திரு உருவத்தை யோக நெறியாலே சித்தத்திலே வைத்துப் பிற நினைவுகளைத் தடுத்து இகத் தெளிவைக் காணும் ஆற்றல் பெற்ற அருந்தவத்தினர் இத்தொகை அடியார்கள்!  இவர்கள் தத்துவங்கள் எல்லாவற்றையும் கடந்தவர். ஞான நெறிகளின் மேல் காண்கின்ற எல்லா ஒளிகளுக்கும் மேலான நிலையில் மனத்தை நிறுத்தியவர். சித்தம் சிதறாமல் ஒரு மனமாய் நின்று இறைவனின் திருவருட் கருணையால் நெஞ்சத்தைக் கட்டுப்படுத்துவதுபவர்கள். சித்தத்தை சிவன்பாலே வைத்தராகிய தொகை அடியார்களைப் போற்றி வழிபடுதலையே இம்மையில் நாம் பெற்ற பெரும் பேறாக எண்ணி மகிழ்தல் வேண்டும்.

சித்தத்தை சிவன்பால் வைத்தார்க்கும் அடியேன்

6. திருவாரூர் பிறந்தார்

அருவம் ஆகியும், உருவம் ஆகியும், எப்பொருளும் ஆகி நிற்கின்ற இறைவன் அருள் ஒளியோடு எழுந்தருளி இருக்கும் திருவாரூரில் பிறந்தவர்கள் யாவருமே சிவகணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். திருவாரூர் என்னும் திருத்தலம் முக்தி பெறுவதற்கு நல்ல மார்க்கத்தை அளிக்கும் ஞான வயல் ! அந்த அளவிற்கு சைவர்கள், திருவாரூரில் பிறந்தாலே போது முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள். திருவாரூரில் பிறந்தவர்கள் அன்பிலும் பக்தியிலும் அரனார் வழிபாட்டிலும் மிகமிகச் சிறந்து விளங்கினர். தியாகராசப் பெருமான் திருவாரூரில் எழுந்தருளி உலகிற்கு ஞான வாசனையை அருளுகிறார். திருவாரூர் பெருமான் கொடையிற் சிறந்தவர். சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப் பாட திருவாரூர்ச் சிவனடியார்கள்தான் மூலகாரணம் ஆவார்கள். இவ்வாறு திருவாரூரில் பிறந்தவர்களுடைய சிறப்பையும், பெருமையையும் ஒருவராலும் உரைக்க உண்ணாது என்று உரைக்கிறார் சேக்கிழார் பெருமான். உலகை உய்விக்கும் பொருட்டு, பெருமைமிக்கத் திருவாரூரில் பிறந்த சிவகணத்தவர்கள் திருநாமம் போற்றிப் பணிவோமாக!

திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்

7. முப்போதும் திருமேனி தீண்டுவார்

சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள் எம்பெருமானால் அருளிச் செய்யப் பெற்ற இருபத்தி எட்டு ஆகமங்கள் ஆகும். கோயில்களில் இவ்வாகம வழியே நித்திய நைமித்திக வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்! இத்தகைய, ஆகம முறைப்படி வழிபாடு புரிதற்குரிய பெரும் பேற்றை பெற்றவர்கள் ஆதி சைவர்கள். முப்போதும் முக்கண்ணர் திருவடியைப் பூசிக்கும் இனியவர். திருமஞ்சனம் செய்து பூ மலரைக் கொட்டிக் குவித்துப் போற்றும் ஆதி சைவர்களே இறைவனின் திருமேனியினைத் தீண்டும் உரிமையையும் பெற்று உய்பவர்கள் ஆவார்கள். வழி வழியாக  வேதாகமங்களை ஓதுபவர்கள். இச்சைவ அந்தண குலத்தார் திருக்கோயில்களில் சிவலிங்க பூசை புரியும் பெருமையைப் புகழ்ந்துரைப்பது என்பது அரியதாகும். இவர்களுடைய பெருமையும் புகழும் போற்றுதற்குரிய அருட் செயலாகும் !

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கடியேன்

8. முழு நீறு பூசிய முனிவர்

எம்பெருமானுடைய அடியார்கள் திருமேனியல் அணி செய்யும் சிவச் சின்னங்கள் திருவெண்ணீரும் உருத்திராட்சமும் ஆகும். திருநீறு கற்பகம், அநுகற்பகம், உபகற்பகம் என்று மூன்று வகைப்படும். இம் மூன்று  வகையான திருநீற்றையும் அணிவதினால் பிறவிப் பிணியைப் போக்கி நலம் பெற மார்க்கம் ஏற்படுகிறது! நோயின்றிக் கன்றையுடைய பசுவின் சாணத்தைப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்து ஏற்று பஞ்சகவ்யம் விட்டுப் பிசைந்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று சிவமந்திரத்தால் வேள்விகள் நடத்தி நெருப்பில் இடவேண்டும். கொழுந்து விட்டு எரியும் ஓமத்தீயில் சாணம் வெள்ளைப் பொடியாக - நீராக எரிந்து விடுகின்றது. இத்திருநீற்றை சிவபெருமானார் திருவடிகளை வாழ்த்தி வணங்கி, பயபக்தியுடன் எடுத்தல் வேண்டும். இத்தகைய திருவெண்ணீறு கற்பகம் என உரைக்கப்படும். காட்டிலே உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைப் பொடி செய்து, ஆவின் நீரை ஊற்றி, நன்றாக பிசைந்து உலர்த்த வேண்டும். திருஓமம் வளர்த்து, கொழுந்து விட்டு எரியும் ஓமத்தீயில் இட்டு எரிக்க வேண்டும். இத்திருவெண்ணீறு அநுகற்பகம்.

பசுக்கள் மேயும் காட்டில் மரங்கள் பற்றி எரிந்து அதனால் உண்டான நீரும், பசுக்கள் கட்டி வைத்த இடங்களில் தீப்பற்றி வெந்துபோன நீரும், செங்கல்சுட்ட காளவாயிலில் உண்டான நீரும், ஆகிய இவற்றைத் தனித்தனியே பசுவின் நீரினால் நன்றாகப் பிசைந்து உலர்த்த வேண்டும். அவற்றைத் திருமந்திரம் ஓதி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட உருண்டைகளை மடங்களில் உள்ள சிவாக்கினியில் இட்டு வேக வைத்தல் வேண்டும். இப்படித் தீயில் இட்டு எடுத்த திருநீறு உபகற்பம் ஆகும். இந்தப்படி அல்லாது அகற்பம். இவற்றுள் எந்த வெண்ணீற்றையாயினும் உடல் முழுவதும் பூசிக் கொள்ளலாம். ஆனால் திருநீற்றை பூசிக்கொள்வதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதைத் தட்டாமல் கடைப்பிடித்தல் வேண்டும். தூய்மையில்லாத இடங்களில் நடக்கும்போது திருநீறு அணியவே கூடாது. திருநீற்றை அணியும்போது அவற்றைக் கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு முழுநீறு பூசிய முனிவர்களைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தொகையடியார்களில் ஒருவராக்கி சிறப்பித்துப் பாடி உள்ளார்.

முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

9. திரு அப்பாலும் அடிச்சார்ந்தார்

அப்பாலும் அடிச்சார்ந்தார் என்று திருநாமம் பூண்டவர்கள் திருத்தொண்டத் தொகையில் அடங்காத ஏனைய சிவனருட் செல்வர்கள் ஆவர் என்று அனைவரையும் போற்றியுள்ளார் சுந்தரர். மூவேந்தர்கள் ஆண்ட தமிழ்நாட்டில் மட்டுமின்றி வேறு மண்டலங்களிலும் முக்கண்ணன் பாதகமலங்களைப் பணிவோரும் இத்தொகையில் சேர்வார்கள். திருத்தொண்டத் தொகையில் வரும் நாயன்மார்களுக்கு முற்பட்டு வாழ்ந்த சிவனடியார்களும், அடிச்சார்ந்தார் ஆவர். சிவனாரின் திருவடியை வழிபடுவோர் அனைவருமே அப்பாலும் அடிச்சார்ந்தார் என்ற தொகையடியாருக்குள் அடங்கிவிடுகிறார். சேக்கிழார் இவ்வுண்மையைப் பாடலால் உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்தி அருளுகிறார்.

அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்.

 
மேலும் 63 நாயன்மார்கள் »
temple
பிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் ... மேலும்
 
temple
திருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், ... மேலும்
 
temple

சுந்தரர் ஜனவரி 19,2011

திருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் ... மேலும்
 
temple
உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி ... மேலும்
 
temple
சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.