பதிவு செய்த நாள்
04
ஆக
2014
11:08
கோவில் சொத்து ஆவணங்களை பாதுகாத்து பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அலட்சியமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரமாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் உள்ளன.ஒப்புதலுடன்...:அவற்றுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களும், 22,600 கட்டடங்களும், 33,665 கடைகளும் அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.அறநிலையத் துறை சட்டத்தின், 29வது பிரிவின்படி, அந்த கோவில் குறித்த எல்லா விவரங்களையும், கோவில் சொத்துகளின் அனைத்து விவரங்களையும் தொகுத்து, பதிவு செய்யப்படும் பதிவேடுகள் மிக மிக முக்கியமானவை. அவை ஒரு வகையில், வரலாற்று ஆவணங்களும் கூட.கோவிலில் உள்ள பாத்திரங்கள், நகைகள், வாகனங்கள், சன்னிதிகள், கல்வெட்டுகள், சிலைகள், மண்டபங்கள், மரங்கள், பாரம்பரியம், திருவிழாக்கள், பரம்பரை அறங்காவலர்கள், நிலங்கள், என, அனைத்து விவரங்களும் அந்த பதிவேடுகளில் இருக்க வேண்டும்.கமிஷனர் ஒப்புதலுடன், சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் அதை பராமரிக்க வேண்டும்.
அந்த சட்டத்தின் 30வது பிரிவின்படி, ஆண்டுதோறும் கோவில் சொத்துகளில் புதிதாக வந்தவற்றையும், நீக்கப்பட்டதையும் தனித்தனி பதிவேடுகளாக பராமரிக்க வேண்டும்.இதற்கு அடுத்தபடியாக, 31வது பிரிவின்படி, 10 ஆண்டு களுக்கு ஒருமுறை பெரிய கோவில்களுக்கு நேரடியாகவும், மற்ற கோவில்களுக்கு இணை கமிஷனர் வாயிலாகவும், பதிவேடு களுக்கு கமிஷனரின் ஒப்புதலை பெற வேண்டியது கட்டாயம்.ஆனால், இம்மூன்று சட்ட விதிகளின் அடிப்படையில் செய்ய வேண்டிய கடமைகளை அதிகாரிகள் சரிவர செய்யாததுடன், பெரும்பாலான கோவில்களில் சொத்து ஆவணங்களை கூட முறையாக பாதுகாக்க தவறுவதுடன், பல இடங்களில் ஆவணங்களை அழிக்கும் மோசடி சம்பவங்களும் நடக்கிறது என, பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.கிரிமினல் குற்றம்:விலை உயர்ந்த பொருட்களையும், சொத்துகளையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்போர் அதை சரிவர செய்யாமல் இருப்பதும், அதற்கான ஆவணங்களை அழிப்பதும், சிறையில் தள்ளும் அளவுக்கு, கிரிமினல் குற்றமாக கருதப்படும் நிலையில், அறநிலையத் துறை அதிகாரிகள், சட்ட விதிகளை அலட்சியப்படுத்துவதை அரசு தடுக்காமல் இருப்பது ஏன் என, பல்வேறு ஆன்மிக அமைப்புகள் கேள்விகள் எழுப்பியுள்ளன.திருவாரூரில் அவலம்இதுகுறித்து ஆலய வழிபடுவோர் சங்க செயல் தலைவர் டி.ஆர். ரமேஷ் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின், 29, 30, 31 ஆகிய விதிகளை அத்துறை அதிகாரிகளே மீறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இரண்டாயிரம் ஏக்கர் நிலம்உள்ள திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில், ஆவணங் கள் குப்பை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.பல்வேறு கோவில்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. இத்தகைய மோசமான நிர்வாகத்தில் கோவில்கள் தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து அறநிலையத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இத்துறையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையும், கோவில்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் அதிகாரிகள் இதற்கான பணிகளை மேற்கொள்ளாததுமே இதற்கு முக்கிய காரணம் என்றார்.