பதிவு செய்த நாள்
04
ஆக
2014
11:08
திருப்பதி;:திருமலை ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் கூறியது:திருமலை ஏழுமலையான் தரிசனம் என்றால், பல மணிநேர காத்திருப்பு, கோவிலுக்குள் தள்ளுமுள்ளு என்றிருந்த நிலை, சிறிது சிறிதாக மாற்றப்பட்டு வருகிறது.லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், தரிசனத்திற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டி வந்தது. வி.ஐ.பி., டிக்கெட்டுகள் அதிகமானதால், சாதாரண பக்தர்களுக்கு தரிசனம் காலதாமதமானது.இப்பிரச்னையை தவிர்க்க ஆலோசிக்கப்பட்டது. முதலில், ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்களை பிடித்து இழுப்பதற்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்க தேவஸ்தானம் முடிவு செய்தது.அதற்காக, ஜூன் மாதம் ஏழுமலையான் கோவிலுக்குள், மூன்றடுக்கு வரிசை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம், பக்தர்கள் சில நொடிகள் ஏழுமலையானை கண்குளிர தரிசிக்க முடிகிறது.மேலும், கோவிலுக்குள் பிக்பாக்கெட் தொல்லையும் குறைந்தது. வி.ஐ.பி., டிக்கெட், 5,000லிருந்து, 800 ஆக குறைக்கப்பட்டது. விரைவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்கள், ஆன் லைன் மூலம் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், 25 ஆயிரம் டிக்கெட்டுகள், ஒரு நாளில், முன்பதிவு மூலம் வழங்கப்படும். பாத யாத்திரை மற்றும் தர்ம தரிசன பக்தர்களுக்கு, அவர்களின் கால நேரப்படி நேர ஒதுக்கீடு கொண்டு வந்தால், திருமலை ஏழுமலையானை அனைவரும் விரைவாக தரிசிக்க முடியும்.மேலும், தரிசனம் முடித்தவுடன் பக்தர்கள் கையில் லட்டு பிரசாதம் கிடைக்க வழி ஏற்படுத்தப்படுகிறது. அதனால், வாடகை அறைகளின் தேவை பெருமளவில் குறையும். மேலும், முடி காணிக்கை செலுத்துமிடத்திலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க, 3 அல்லது 4 கூடுதல் கல்யாண கட்டா (முடி காணிக்கை செலுத்துமிடம்) ஏற்படுத்தினால், ஒரு சில மணிநேரங்களில் தரிசனம் முடிக்கலாம், என்றார்.பவித்ரோற்சவம்திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், தங்களை அறியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், கோவிலில் தினசரி பூஜைகளில், ஏதேனும் குறை அல்லது தோஷம் இருந்தாலும் அதை அகற்றுவதற்கு, இந்த பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. வரும், 6ல் துவங்கி, 8ம் தேதி வரை நடைபெறும், பவித்ரோற்சவத்தின் போது, ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பட்டு நூலிழைகளால் ஆன, பல வண்ண மாலைகளை, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சாற்றுவர்.இதையொட்டி, வசந்தோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், கல்யாணோற்சவம் முதலிய சேவைகளை, மூன்று நாட்களுக்கு ரத்து செய்துள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.